கும்பகோணத்தில் மழைநீரை சேமிக்க வாய்க்கால், குளங்கள் தூர்வாரப்படுமா?

கும்பகோணம், ஜூலை 16: கும்பகோணத்திலுள்ள வாய்க்கால்கள், குளங்களை தூர் வாரி, மழை நீரை சேமிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்பகோணம் காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் பிரிந்து நகருக்குள் வரும் பழவத்தான்கட்டளை, பெருமாண்டி, உள்ளூர் மற்றும் தேப்பெருமாநல்லூர் ஆகிய நான்கு வாய்க்கால்கள் வழியாக நகர பகுதிகள் முழுவதும் உள்ளே சென்று செட்டிமண்டபம் ஐந்து தலைப்பு வாய்கால்களில் ஒன்றாக இணையும். அதனால் அந்த இடத்திற்கு ஐந்து தலைப்பு வாய்க்கால் என்று பெயா். ஒரு காலத்தில் கும்பகோணம் நகரத்திற்கு குடிநீர் ஆதாரமாகவும், சுற்றியுள்ள கிராமப்பகுதி விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.பின்னர் வாய்க்கால்களில் தண்ணீர் வராததால், குடியிருப்புகளின் கழிவு நீர் கலப்பதால் கழிவுநீர் வாய்க்காலாக மாறியுள்ளது.

Advertising
Advertising

இந்த வாய்க்கால்களை தூர்வாருவதற்கு கடந்த 2016 ம் ஆண்டு சுமார் ரூ. ஒன்றரை கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கியது. தொடர்ந்து பணிகள் நடைபெறவில்லை. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி என்னானது என்று புரியாத புதிராக உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.இதேபோல் கும்பகோணத்திலுள்ள 90 குளங்களில் 50 க்கும் மேற்பட்ட குளங்கள் மறைக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் தற்போத சுமார் 40 குளங்கள் தான் உள்ளது. இதில் பெரும்பாலான குளங்கள் தூர் வாரும் பணி துவங்கியது. ஆனால் அனைத்து குளங்களும் அரைகுறையாக தூர்வாரப்படாமலேயே உள்ளது.இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தபோது, போதுமான நிதியில்லை என பதில் கூறுகிறார்கள்.வாய்க்கால்களை தூர் வாராததால் கழிவு நீர், குட்டை போல் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகும் கூடாரமாகியுள்ளது. இதேபோல் குளங்களை தூர் வாராததால், கழிவு நீர் தேங்கி பாம்புகள் மற்றும் விஷஜந்துக்கள் உற்பத்தியாகி, அருகிலுள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு புகுந்து விடுவதால், வாய்க்கால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது மழை காலம் தொடங்கவுள்ள நிலையில், கும்பகோணத்திலுள்ள அனைத்து வாய்க்கால்கள், குளங்களையும் தூர் வாரி, நீர் வரும் வெளியேறும் பாதைகள் சீரமைத்து மழை நீரை சேமிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து கும்பகோணம் வாய்க்கால், குளம் பாதுகாப்போர் சங்க தலைவர் கண்ணன் கூறுகையில்,கும்பகோணத்திலுள்ள வாய்க்கால்களை மகாமக விழாவிற்கு முன்பு அகலப்படுத்தி, தூர் வாரி, அழகுப்படுத்த வேண்டும் என ரூ. ஒன்றரை கோடி நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே அப்பணி கிடப்பில் போடப்பட்டது.இதேபோல் கும்பகோணத்திலுள்ள அனைத்து குளங்களையும், தூர் வாரி, தண்ணீர் விட்டு, தேக்கி வைக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் நகராட்சி நிர்வாகம் போதுமான நிதியில்லை என கூறுகிறது. ஆனால் ஒதுக்கிய நிதியையும் செலவு செய்யாமல் பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் கும்பகோணம் நகராட்சியில் தூர் வாருவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.ஒன்றரை கோடி நிதி எங்கே போனது என தெரியவில்லை.தற்போது மழை காலம் தொடங்கவுள்ள நிலையில் அனைத்து வாய்க்கால்கள், குளங்களை தூர்வாரி தண்ணீர வரும் மற்றும் வெளியேறும் பாதையை சுத்தப்படுத்தி, மழை நீரை குளங்களில் சேமிக்க வேண்டும் என்றார்.

Related Stories: