×

தனித்தமிழ் இயக்கம் தொடங்கி தமிழை வளர்த்த மறைமலை அடிகளாருக்கு நாகையில் மணிமண்டபம்

நாகை, ஜூலை 16: நாகை என்றால் எல்லோரும் மனதிலும் நினைவுக்கு வருவது மீன்பிடி தொழில், விவசாயிகளும் தான். மிக நீண்ட கடற்கரையை கொண்ட நாகை மாவட்டத்தில் தமிழை போற்றி வளர்த்த தமிழ் ஆர்வலர் மறைமலை அடிகளார் பிறந்தது நாகை மாவட்டத்தில் தான் என்ற பெருமையும் உண்டு. 1876ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி மறைமலை அடிகளார் நாகை காடம்பாடி என்ற பகுதியில் சொக்கநாதர், சின்னம்மையார் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். வேதாசலம் என்ற இயற்பெயரை கொண்டு நாகையில் சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வந்தார். தனது இயர் பெயரான வேதாச்சலம் என்பதை தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916ல் மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக் கொண்டார். எண்ணற்ற தமிழ் இலக்கியங்களை எழுதிய அவர் தொடர்ந்து தமிழ் மொழிக்கு சேவையாற்றி வந்தார். இவரது புகழை இதுவரை தமிழ்சங்கங்கள் மட்டுமே தாங்கி பிடித்து வருகிறது. இதற்கு காரணம் வடமொழி கலப்பு இல்லாமல் தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர். இவரது தனித்தமிழ் சேவை புதிய சந்ததியினருக்கு சென்று சேரவில்லை. அவரது புகழை போற்றி பாதுகாக்க அரசு தவறி விட்டது என்று தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இவரது தமிழ்சேவையை பாராட்டு 1969 ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி நாகை ரயில் நிலையத்தில் மறைமலை அடிகளாரின் சிலையை திறந்துவைத்தார்.

அதன் பின்னர் அந்த சிலை பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இந்நிலையில் மறைமலை அடிகளாரின் பிறந்த தினமான நேற்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியால் திறந்து வைத்த சிலையை கூட தூய்மை செய்ய அரசு முன்வரவில்லை. இதுகுறித்து தமிழ்ஆர்வலர்கள் கூறியதாவது: மறைமலை அடிகளார் பிறந்த ஊரின் பெருமை மறைக்கப்படுகிறது. தமிழ் சங்கத்தினர் மறைமலை அடிகளாரை போற்றும் விதமாக தாங்கள் வைத்த எந்த கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை. தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய பணிகளை எதிர்கால சந்ததிகள் அறிந்துகொள்ளும் வகையில் நாகையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். மறைமலை அடிகளார் தமிழ் வரலாற்றை மாணவர்கள் தெரிந்துகொள்ள இங்கு நூலகம் உருவாக்க வேண்டும். நாகையின் முக்கிய சாலையான பப்ளிக் ஆபீஸ் ரோடு என்பதை மறைமலை அடிகளார் சாலை என்று மாற்றி வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதை தமிழ் வளர்ச்சித்துறை நிராகரித்து கடிதம் அனுப்பியுள்ளது வேதனை தருகிறது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைத்த சிலை என்பதற்காக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் மறைமலை அடிகளாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது இல்லை. அதேபோல் நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் அந்த சிலையை கண்டு கொள்வதே இல்லை. அவரது பிறந்த தினமான நேற்று கூட அந்த சிலையை பராமரிக்க வேண்டும் என்று அரசுக்கு தோன்றவில்லை. தமிழ் மொழிக்காக பல தொண்டாற்றிய மறைமலை அடிகளாரின் சிலையை பராமரிப்பு செய்வதுடன் எதிர்காலத்தில் அரசு விழாவாக கொண்டாட வேண்டும். பல தலைவர்களின் சிலைகள் இன்று காட்சி பொருளாக மாறி வருவதுபோல் தமிழை வளர்த்த மறைமலை அடிகளாரின் நாலையில் உள்ள சிலையும் காட்சி பொருளாக மாறிவிடாமல் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.



Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...