×

காரைக்காலில் இன்று பிச்சாண்டவர் வீதியுலாவில் மாங்கனி இறைப்பு விழா

காரைக்கால், ஜூலை 16: வரலாற்று புகழ்மிக்க காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழாவையொட்டி, இன்று (16ம்தேதி) பிச்சாண்டவர் வீதியுலா நிகழ்ச்சிநடைபெறவுள்ளது.இறைவனின் (பரமசிவன்) திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு மாங்கனித்திருவிழா கடந்த 13ம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. திருவிழாவின் இரண்டாம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக 14ம் தேதி காலை 10 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவின் மூன்றாம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று (15ம்தேதி) மாலை பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று (16ம்தேதி) காலை 6 மணிக்கு பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும், அதுசமயம், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, வீட்டு வாசல், மாடி கூறைகளில் இருந்து மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மாலை 6 மணிக்கு காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைத்து சென்று அமுதுபடையல் படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து, இரவு 9 மணிக்கு  சித்திவிநாயகர் ஆலயத்தில் பரமதத்தருக்கு 2ம் திருமணம் நிகழ்ச்சியும், 11 மணிக்கு புனித வதியார் புஷ்பப்பல்லகில் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து நாளை (17ம்தேதி) அதிகாலை 5 மணிக்கு சிவதரிசன பயனை தந்தருளும் பஞ்சமூர்த்திகளும், கயிலாசவாகன ரூடராய் எழுந்தருளி அம்மையாருக்கு முக்தியளித்து திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.விழா ஏற்பாடுகளை, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா, கோயில் நிர்வாக அதிகாரி சுந்தர், அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் பலர் சிறப்பாக செய்து வருகின்றனர்.


Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...