×

சீர்காழி அரியாப்பிள்ளை குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றாமல் தூர்வாரும் பணி

சீர்காழி, ஜூலை 16: சீர்காழி தாடளான் கோயில் மெயின் ரோட்டில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரியாப்பிள்ளை குளம் உள்ளது. இக்குளத்தால் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நல்ல குடிநீர் கிடைத்து வந்தது. மேலும் மழை காலங்களில் பெரும் வடிகாலாகவும் விளங்கியது. குளம் நிரம்பினால் அந்த தண்ணீர் வாய்க்கால் வழியாக வெளியேறும் வகையிலும், குளத்தில் தண்ணீர் குறைந்தால் அதே வாய்க்கால் வழியாக குளத்தை நிரப்பும் வகையிலும் நீர்வழிப்பாதை இருந்து வந்தது ஆனால் காலப்போக்கில் அரியாப்பிள்ளை குளம் ஆக்கிரமிப்பாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் வறண்டு, செடி, கொடிகள் முளைத்து காடுகள் போல் காணப்பட்டு வருகிறது.இந்த குளத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிலர் தங்களுக்கு சொந்தமென கொண்டாடி குளத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயன்றனர். இதனை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பாக பேசப்பட்டதுஇந்நிலையில், மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டம் சீர்காழி நகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நகராட்சி பகுதியில் உள்ள குளங்களில் மூன்று மாதங்களில் நீர் நிரப்புதல், நீர் சேமிப்பு உள்ளிட்டவை செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் வரும் காலங்களில் நிலத்தடி நீரை சேமிப்பது தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக அரியாப்பிள்ளை குளத்தை தூர்வாரும் பணி நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின் தலைமையில் தொடங்கியது.

இதில், நகராட்சி மேலாளர் ஆனந்தராஜ், நகரமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன், பணிதள மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வர் முத்துகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் பொக்லைன், டிராக்டர்கள் ஆகியவற்றின் உதவியுடன் குளத்தில் முளைத்திருந்த செடி, கொடிகள், குப்பைகளை அகற்றி கரைகளை பலப்படுத்தும் பணியை செய்தனர். குளத்தை முழுமையாக தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் குளத்தில் உள்ள செடி கொடிகள் குப்பைகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. குளத்தின் பரப்பளவு சுருங்குவதால் எந்த பயனும் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.குலத்தை முழுமையாக தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்திற்கு தண்ணீர் வரும் பாதைகளை சரி செய்தால் மட்டுமே குளத்தில் தண்ணீர் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நல்ல குடிநீர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் பொது மக்கள் பயன் அடைய முடியும். எனவே மாவட்ட நிர்வாகம் அறியாப்பிள்ளை குளத்தை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது