×

காலியிடம் இல்லை என அறிவிப்பு இடமாறுதல் கிடைக்காமல் குமரி போலீசார் விரக்தி மதுரையில் ஐஜியிடம் மனு அளித்தும் பயனில்லை

நாகர்கோவில், ஜூலை 16: காவல்துறையில் தென்மண்டலத்தின் கீழ் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் வேலை பார்க்கும் போலீசார் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் வேண்டுபவர்கள் நேரடியாக மனு தரலாம் என தென்மண்டல ஐஜி அலுவலகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக 9 மாவட்டங்களிலும் வேலைபார்த்து வரும் போலீசார் பலர் நேற்று மதுரை தென்மண்டல ஐஜியிடம் மனு கொடுத்தனர்.  மனு பெறுவதற்கு முன்பே குமரி, தேனி ஆகிய இரு மாவட்டங்களிலும் காலிபணியிடங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் குமரிக்கு இடமாறுதல் கிடைக்கும் என நம்பிக்கையோடு வந்த போலீசார் விரக்தி அடைந்தனர். இதுபோல் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இடமாறுதல் கேட்டவர்களுக்கு பின்னர் இடமாறுதல் தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிவகங்கை மாவட்டத்திற்கு இடமாறுதல் கேட்டவர்களுக்கு உடனே இடமாறுதல் வழங்கப்பட்டது.

 குறிப்பாக குமரி மாவட்டத்தில் இடமாறுதல் கிடைக்காததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். குமரி மாவட்டத்திற்கு இடமாறுதல் கேட்டுசென்ற போலீஸ் தரப்பில் கூறியதாவது: குமரி, தேனி மாவட்டங்களில் காலிபணியிடங்கள் இல்லை என கூறுகின்றனர். ஆனால் குமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் காலிபணிடங்கள் அதிக அளவு உள்ளன. இதனை மறைத்துள்ளனர். குமரி ஆயுதப்படையில் 2008வரை சேர்ந்தவர்களுக்கு மட்டும் போலீஸ் நிலையங்களில் பணிசெய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 ஆனால் மற்ற மாவட்டங்களில் 2013 வரை சேர்ந்தவர்களுக்கு காவல்நிலைய பணி ஒதுக்கப்பட்டுள்ளது. குமரியிலும் ஆயுதப்படையில் 2013 வரை சேர்ந்தவர்களுக்கு காவல்நிலைய பணி வழங்கினால் ஆயுதப்படையில் அதிக காலிபணியிடங்கள் கிடைக்கும். அப்போது வெளிமாவட்டங்களில் வேலை பார்க்கும் எங்களை போன்றோர் குமரி மாவட்டத்திற்கு இடமாறுதல் பெற்று வரமுடியும். குமரி மாவட்டத்தில் உள்ளவர்கள் பலர் வெளிமாவட்டங்களில் குடும்பத்தை பிரிந்து பணியாற்றி வருகின்றனர்.

 காவல்துறையில் மனஅழுத்தத்தை போக்க யோகா உள்ளிட்ட பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் குடும்பம், மனைவி, குழந்தைகளை பிரிந்து வேலை செய்யும், ஆண், பெண் போலீசார் இடமாறுதல் கிடைக்காததால் மனசோர்வு, மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மதுரையில் ஐஜி தலைமையில் இடமாறுதல் என்ற அறிவிப்பு வந்தவுடன் இடமாறுதல் கிடைக்கும் என நினைத்தோம். ஆனால் காலிபணியிடம் இல்லை என முதலிலேயே புறக்கணித்து விட்டனர். அடுத்த கட்டமாக டிஜிபியை பார்க்க வேண்டிய நிலைக்கு நாங்கள் ஆளாகியுள்ளோம். இதனால் குமரியில் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் போலீசாரை காவல்நிலையங்களில் உள்ள காலிபணியிடங்களுக்கு அனுப்ப உயர் அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Tags :
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...