×

தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 3 அணிகள் வேட்புமனு தாக்கல் நீதிமன்ற உத்தரவுப்படி 22ம் தேதி தேர்தல்

ஆரல்வாய்மொழி, ஜூலை 16: தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 22ம் தேதி தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து நேற்று வேட்புமனு தாக்கல் நடந்தது.தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த தேர்தலின் போது பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் முக்கிய பிரமுகர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர்கள் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் நீதிமன்றம் வரும் 22ம் தேதி தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பித்தது.இதன்படி தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நேற்று வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் 3 அணியாக பிரிந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் பிரம்மநாயகம் என்பவர் தலைமையில் 11 பேர் அணி வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அதிமுக மாவட்ட செயலாளர் அசோகன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் குமார் என்ற பகவதியப்பன் தலைமையில் 13 பேர் அணி வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் ஒன்றிய திமுக செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூதலிங்கம் பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமமுக சார்பில் பகவதிபெருமாள் என்ற சந்தோஷ் தலைமையில் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மாவட்டச்செயலாளர் பச்சைமால், மாநில ஜெ பேரவை துணை அமைப்பாளர் இன்ஜினியர் லட்சுமணன், நாஞ்சில் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் நடந்தது. தேர்தல் அதிகாரியாக பிரபாகரன் வேட்பு மனுக்களை பெற்றுக்கொண்டார். ஏற்கனவே பிரச்னைக்குரிய இடம் என்பதால் காலையில் இருந்தே பெரும் பரபரப்பு நிலவியது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். இன்று வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. வரும் 22ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.

Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு