அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாயம்

பொள்ளாச்சி, ஜூலை 12:பொள்ளாச்சி நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து வகை கட்டிடத்திலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என, நகராட்சி நிர்வாக வலியுறுத்தியுள்ளது.   பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் வணிக வளாக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வார்டுபகுதியில் உள்ள கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு  அமைப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.  மேலும், குடியிருப்பு மற்றும் வணிக வளாக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியார் மற்றும் அரசு கட்டிடங்களில், 15ம் தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த காலக்கெடு இம்மாதம் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில், மத்திய பஸ் நிலையம் மற்றும் தேர்நிலை, பாலக்காடுரோடு, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கான அறிவிப்பு பிளக்ஸ்போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது.   இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கண்ணன் கூறுகையில், ‘பொள்ளாச்சி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வண்ணம், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நகரில் அனைத்து வகையான கட்டிட பகுதிகளிலும் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள அடிக்குமாடி குடியிருப்பு, வணிகவளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள சிமென்ட் கான்கிரீட் கூரை கட்டிட பகுதிக்கான மழைநீர் கட்டமைப்பை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கட்டிட பகுதிகளில், இம்மாதம் இறுதிக்குள்  மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த தகவல்களை நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள்  எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மழைநீரை சேமிக்கும் நடவடிக்கைக்காக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: