வனவிலங்குகள் ெதால்லை மாற்று பயிர் பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

மஞ்சூர், ஜூலை 12: நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் உள்ள விவசாயிகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள விளைநிலங்களுக்கு தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். விளைநிலங்களை காவல் காக்கும் பணிகளில் இளைஞர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும்.சூரிய வெளிச்சம் இருக்கும் போதே விளைநிலங்களுக்கு சென்று வரவேண்டும். வனப்பகுதிகளை ஒட்டியுள்ளப் பகுதிகளை திறந்தவெளி கழிப்பிடங்களாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.  வீட்டுக்கழிவுகள், உணவு கழிவுகளை வனப்பகுதிகளின் அருகில் கொட்டக்கூடாது. இரவு நேரங்களில் வெளியில் செல்லும்போது டார்ச்லைட் எடுத்து செல்ல வேண்டும். வனப்பகுதிகளின் அருகாமையில் உள்ள விவசாயிகள் பழவகை நாற்றுகளை தங்களது நிலங்களில் பயிரிடுவதால் பழங்களின் வாசனையை நுகர்ந்து அறுவடை காலங்களில் வனவிலங்குகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதுபோன்ற சமயங்களில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை விழிப்புணர்வோடு கண்காணித்து விலங்குகள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத்துறையின் 24மணிநேர இலவச சேவை தொலைபேசி எண் 18004253968 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விவசாயிகள் வனவிலங்குகளை ஈர்க்கும் பயிர்களை தவிர்த்து மாற்று பயிர்களை பயிரிட முன்வர வேண்டும்.  வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை கொட்டுவது, வனவிலங்குகளை துன்புறுத்துவது, வனவிலங்குகள் முன்பாக செல்பி எடுப்பது, சட்ட விரோதமாக மின்வேலி அமைப்பது மற்றும் மின்வேலி அமைக்க உதவுவது போன்றவை தண்டனைகுறிய குற்றங்களாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வனச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் வனத்துறையினர் துண்டு பிரசுரங்களையும் விநியோகித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தென்மேற்கு பருவ மழையால்...