ஆதார் அட்டைக்காக அலைக்கழிப்பு இ சேவை மையத்தை மக்கள் முற்றுகை

சூலூர், ஜூலை 12: சூலூரில் இ-சேவை மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள்டி.வி. நிறுவன அலுவலகத்துடன்  இணைந்து அரசு இ-சேவை மையம் செயல்பட்டு வருகின்றது.

இங்கு பணியில் இருந்த பணியாளர்  கடந்த 15 நாட்களாக பணிக்கு வராத காரணத்தினால் இ சேவை  மையம் முடங்கியது. சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாள்தோறும் இம்மையத்திற்கு வரும் பொதுமக்கள் பணிகள் எதுவும் நடைபெறாததால் ஆத்திரம் அடைந்தனர்.மேலும் இந்த மையத்திற்கு வரும் பொதுமக்களை அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்தனர். பத்து நாட்களுக்கு மேல் அலைக்கழிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று இ சேவை மையத்தை முற்றுகையிட்டு  அலுவலக மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி இ சேவை மைய அதிகாரியிடம் கேட்டபோது, இதற்கு முன்னர் பணியில் இருந்த பணியாளரின் பாஸ்வேர்டு லாக் ஆகி விட்டதால் சர்வர் வேலை செய்யவில்லை. பழுது நீக்க 15 நாட்களாகும். எனவே பொதுமக்கள் ஆதார் கார்டு சம்பந்தமாக இந்த அலுவலகத்திற்கு வந்து எந்த உபயோகமும் இல்லை  என்று கூறினார்.முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘பள்ளியில் ஆதார் அட்டை கேட்டதால் குழந்தைகளை அழைத்து கொண்டு தினமும் இ சேவை மையம் வந்து செல்கிறோம். சரியான பதிலை தெரிவிப்பதில்லை. எந்த ஒரு பணியும் நடப்பதில்லை. ஒவ்வொரு நாளும் தாங்கள் பணிக்கு செல்வதை விடுத்து,  ஆதார் அட்டைக்காக  குழந்தைகளுடன் வந்து இங்கு காத்திருக்கிறோம். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இசேவை மையங்களில் உள்ள சர்வர் பிரச்னைகளைக் களைய வேண்டும்’ என தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: