ஆலாந்துறை விபத்து வழக்கு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோவை எஸ்பியிடம் மனு

கோவை, ஜூலை 12:கோவையை அடுத்த ஆலாந்துறை ஊர் பொதுமக்கள்  எஸ்.பி.,சுஜித்குமாரிடம் நேற்று மனு அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் பள்ளிபாளையம் பகுதியில் கடந்த 9ம் தேதி இரவு சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த ரங்கசாமி(45) என்பவர் மீது அந்த வழியாக குடிபோதையில் பைக்கில் வந்த பழனிசாமி என்பவர் மோதினார். இதில் ரங்கசாமி காயமடைந்தார். அப்போது, பழனிசாமி, தனது மகன் ஹரிபிரசாத்தை போனில் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு வர சொல்லி, அவருடன் சேர்ந்து ஏழு பேர் கொண்ட கும்பல், எங்களை ஜாதி பெயரை சொல்லி தரக்குறைவாக திட்டினர். பின்னர் அவர்கள், பழனிசாமியை மட்டும் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தனர். அப்போது ஊர் பொது மக்களாகிய நாங்கள் காயமடைந்த ரங்கசாமியையும் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினோம். ஆனால் ஹரி பிரசாத் மற்றும் அவருடன் வந்தவர்கள் அதனை ஏற்க மறுத்து எங்களுடன் இருந்த சிலரை தாக்கினர். இதில் செந்தில்குமார்(42), கருப்பசாமி(55) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 5 பேர் காயம் அடைந்தனர்

இது தொடர்பாக ஆலாந்துறை காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் சார்பில், போலீசார் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் ஜாதி பெயரை சொல்லி திட்டி தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த 2 பேர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹரி பிரசாத் உடன் வந்த மேலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே செந்தில்குமார், கருப்பசாமி ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய ஹரி பிரசாத் மற்றும் அவருடன் வந்த நபர்களை கைது செய்ய வேண்டும். கார் உடைத்த வழக்கில் ஈடுபட்ட நபர்களை மட்டும் கண்டறிந்து அவர்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: