தமிழகம் முழுவதும் 414 பணியிடங்கள் காலி 6 ஆண்டுகளாகியும் பதவி உயர்வு இல்லை

சேலம், ஜூலை 12:  பொது நூலகத்துறையின் கீழ் செயல்படும் நூலகங்களில் தமிழ், ஆங்கிலம் நாளிதழ்கள் மட்டுமின்றி வார, மாத, அரையாண்டு இதழ் மற்றும் நாவல், கதை புத்தகங்கள் உள்ளன. கிராமபுற இளைஞர்களுக்கு அறிவு வெளிச்சம் பாய்ச்சும் நூல்களை பாதுகாக்கும் நூலகர்களுக்கு, பல ஆண்டாக பதவி உயர்வே வழங்கப்படவில்லை. ஓய்வு பெறும் வயது தாண்டியவர்கள் பலருக்கு, பதவி உயர்வு இல்லாத துறையாக நூலக துறை உள்ளது என்று ஊர்ப்புற நூலகர்கள் விரக்தியடைந்துள்ளனர். இது குறித்து நூலகர்கள் கூறியதாவது:பொது நூலகத்துறையின் கீழ் செயல்படும் ஊர்ப்புற நூலகங்களில்,  நூலக அறிவியல் படிப்பு படித்தவர்கள் நூலகர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 1998ம் ஆண்டு தொகுப்பூதியமாக ₹1000 வழங்கப்பட்டது. பின்னர் ₹500 சேர்ந்து, ₹1500 வழங்கப்பட்டது. கடந்த 2009 முதல் சிறப்பு காலமுறை ஊதியமாக ₹2500 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் 1,914 ஊர்புற நூலகங்கள் உள்ளன. இதில், 1,500 பேர் பணியாற்றி வருகின்றனர். மீதமுள்ள 414 பணியிடங்கள் காலியாக உள்ளது. ஊர்புற நூலகத்தில் பணியாற்றும் நூலகர்களுக்கு கடந்த 6 ஆண்டாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் கிராமப்புற நூலகர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட மூன்றாம் நிலை பணியிடங்கள் காலியாக இருந்தும் கூட, இந்த பணியிடங்கள் நிரப்பப்படாததால், கடந்த 2008ம் ஆண்டு முதல் ஊர்புற நூலகர்களாக வந்தவர்கள்,  தற்போது வரை ஊர்புற நூலர்களாகவே பணியாற்றி வருகின்றனர். எனவே, ஊர்ப்புற நூலர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: