தலைவாசல் அருகே நூறு நாள் திட்ட பணி கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

ஆத்தூர், ஜூலை 12: தலைவாசல் அருகே, நூறுநாள் பணி திட்டத்தில் வேலை கேட்டு, பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புளியங்குறிச்சிகிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், வருவாயின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனையடுத்து நேற்று இந்த கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம் தங்களது நிலையை விளக்கி, மீண்டும் நூறுநாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என கூறி, முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய அலுவலரிடம், தங்களுக்கு முறையாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்க வேண்டும், பாரபட்சமின்றி ஊராட்சி செயலாளர் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதனையடுத்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: