இடைப்பாடி அடுத்த கல்வடங்கத்தில் காவிரியாற்றின் மையம் வரை செல்லும் நபர்களால் ‘பீதி’

சேலம், ஜூலை12: சேலத்தை அடுத்த இடைப்பாடி கல்வடங்கம் காவிரியாற்றின் மையப்பகுதியின் ஆபத்தை உணராமல்  மக்கள் குளியல் போடுவது பீதியை ஏற்படுத்தி உள்ளது.  சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கல்வடங்கம் காவிரியாறு பகுதி உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு பரிகாரங்கள் செய்யவும், தங்கள் ஊரில் உள்ள கோயில் விழாக்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லவும் தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இப்படி வருபவர்கள் ஆற்றின் மையப்பகுதி வரை ெசல்கின்றனர். தற்போது ஆற்றில் தண்ணீரின் ேவகம் குறைவாகவே உள்ளது. ஆனால் மையப்பகுதியில் சீற்றம் அதிகமாக உள்ளது. இதை உணராமல் இளைஞர்கள் ஆற்றின் மையப்பகுதிக்கு ெசல்கின்றனர். இதேபோல் பலர், மது அருந்திக் கொண்டும் ஆற்றில் குளியல் போடுகின்றனர். இதனால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்று கரையில் இருப்பவர்கள் கலங்கி நிற்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி மீனவர்கள் கூறியதாவது: பல்வேறு சடங்குகளை செய்வோர் இங்கு வருகின்றனர். இவர்கள் தண்ணீரைக் கண்ட உடன் உற்சாகமாகி ஆற்றில் இறங்க தொடங்கி விடுகின்றனர். இவர்களில் சிலர் ஆற்றின் மையப்பகுதி வரை செல்கின்றனர். நேற்று முன்தினம் கூட குளியல் போட்ட ஒருவர் நடுப்பகுதி வரைக்கும் சென்றார். அங்கு நீந்தியவர் ஆற்று தண்ணீரை குடித்துவிட்டு, இருமிக் கொண்டே மேலே வந்தார். சிலர் சுதாரித்துக் கொண்டு வந்துவிடுகின்றனர். அனால் சிலர் அப்படியே மூழ்கிவிடுகின்றனர். இந்த பகுதியில் ஆபத்து உள்ளது என எச்சரிக்கை பலகை வைத்திருந்தாலும் கூட, இதனை எல்லாம் இங்கு வருபவர்கள் கண்டு கொள்வதில்லை. இதே பகுதியில் இதற்கு முன்னர் பல்வேறு விபத்துக்கள் நடந்து, அது இறப்பில் முடிந்துள்ளது. எனவே தற்போது மையப்பகுதிக்கு செல்பவர்களை பார்க்கும் போது, பீதியாக உள்ளது. இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

Related Stories: