உயர்மின்கோபுர பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 17 விவசாயிகள் கைது

சேலம், ஜூலை 12:சேலம் சங்ககிரி அருகே, உயர்மின் கோபுர பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 17 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்கள் வழியாக, உயர்மின் அழுத்த பாதைக்கு, மின்கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் சங்ககிரி அடுத்த குள்ளக்கவுண்டனூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் நிலத்தில் அனுமதியின்றி மின் கோபுரம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை, சங்ககிரி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று காலை 2வது நாளாக, சங்ககிரி அடுத்த சின்னகவுண்டனூர் களியனூர் பகுதியில் மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு அளவீடு செய்ய, பணியாளர்கள் வந்தனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், முன்அனுமதியின்றி எங்களது நிலத்தில் நுழைய கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பெருமாள், சங்ககிரி வட்டார செயலாளர் ராஜேந்திரன், களியனூர் பழனிசாமி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: