அத்தியாவசிய பொருட்கள் வழங்காததால் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகளை வீசி எறிந்து மக்கள் போராட்டம்

வாழப்பாடி, ஜூலை 12: வாழப்பாடி அருகே, அத்தியாவசிய பொருட்கள் வழங்காததை கண்டித்து, ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பி.கண்ணுக்காரனூர் பகுதியில் ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், 239 குடும்ப அட்டைகளுக்கு அரிசி, பருப்பு, எண்ணை, சர்க்கரை மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் அனைத்து கார்டுகளுக்கும், சரிவர பொருட்கள் வழங்கப்படுவதில்ைல என அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இது குறித்து, வட்ட வழங்கல் அலுவலரிடமும் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பொதுமக்கள் ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்கினர். அப்போது, 239 கார்டுதார்களுக்கு முழுமையாக பொருட்களை வழங்காமல், 100 கார்டுகளுக்கு மட்டும் அரிசி, பருப்பு வழங்கப்பட்டது.

இதனால் காலை முதலே காத்திருந்த மக்கள் ஆவேசமடைந்து, பொருட்கள் முறையாக வழங்கக்கோரி திடீரென கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முறையாக பொருட்கள் வழங்காத நிலையில் கார்டுகள் மட்டும் எதற்கு? என கேள்வி எழுப்பிய மக்கள், தங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை கடை முன்பு வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவலறிந்த வாழப்பாடி போலீசார், முற்றுகையில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முறையாக பொருட்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விற்பனையாளர்கள் மீது வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவிக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: