காவிரியில் கழிவுநீர் கலந்து நிலத்தடி நீரை மாசு ஏற்படுத்திய பாலத்தில் செல்லும் உடைந்த கழிவுநீர் குழாய் அகற்றப்பட்டு புதிதாக அமைப்பு

திருச்சி, ஜூலை 12: கழிவுநீர் காவிரி ஆற்றில் கலந்து, நிலத்தடி நீரை மாசு ஏற்படுத்திய பாலத்தில் செல்லும் உடைந்த கழிவுநீர் குழாய் தினகரன் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டு புதிதாக மாற்றப்பட்டது.திருச்சி மாநகராட்சியில் உள்ள ரங்கம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடை குழாய் வழியாக வெளியேற்றப்பட்டு குழாய்கள் மூலம் பஞ்சப்பூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிப்பு செய்ய வாய்க்காலில் திறந்து விடப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் இந்த பாதாளசாக்கடை குழாய் மண்ணுக்கு அடியில் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் ரங்கம் பகுதியில் இருந்து செல்லும் பாதாள சாக்கடை குழாய்கள், காவிரி ஆறு குறுக்கே இருப்பதால் பாலம் அமைத்து அதன் வழியாக காவிரி ஆறு குறுக்கே கொண்டு செல்லப்படுகிறது. இப்படி காவிரி ஆற்றின் மேல் பகுதியில் பாலத்தின் வழியாக செல்லும் கழிவுநீர் குழாயில் பாலம் நிறைவு பெறும் இடத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் சாக்கு பைகளை சுற்றி வைத்தனர். ஆனால் அதிலிருந்து கழிவுநீர் ஆறுபோல் வெளியேறியது. இப்படி வெளியேறும் கழிவுநீர் நேரிடையாக காவிரி ஆற்றில் ஓடியது. இதனால் காவிரி ஆறு தற்போது கழிவுநீர் ஆறாக மாறும் ஒரு அவலம் ஏற்பட்டது. தொடர்ந்து கழிவுநீர் காவிரி ஆற்றில் ஓடினால் நிலத்தடி நீர் மாசுபடும் சூழ்நிலையும், தொற்றுநோய் பரவும் சூழலும் உருவானது.

எனவே பாதாள சாக்கடை கழிவுநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டுமென கடந்த 24ம் ேததி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கசிவை சீரமைக்க முடிவெடுத்து, உடைந்த குழாய்க்கு பதிலாக புதிய குழாயை பொருத்தினர். இதனால் தற்போது அங்கு சிறிய கசிவுகூட இல்லாமல் பஞ்சப்பூருக்கு கழிவுநீர் உந்தப்பட்டு செல்கிறது. மேலும் அப்பகுதி பகுதி பொதுமக்கள் தூர்நாற்றத்திலிருந்தும், தொற்று நோய் அபாயத்திலிருந்தும் மீண்டனர். அதே போல் நிலத்தடி நீர், காவிரி நீர் மாசுபாடும் தடுக்கப்பட்டது. இதனால் தினகரன் நாளிதழுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: