கடையம் காவல் நிலையத்திற்கு பயணிகளுடன் வந்த அரசு பஸ்

கடையம், ஜூலை 12: கடையம் காவல் நிலையத்திற்கு பயணிகளுடன் வந்த அரசு பஸ்சால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.வைகுண்டம் பணிமனையை சேர்ந்த அரசு பஸ், நேற்று மாலை 4.30 மணியளவில் அம்பையில் இருந்து தென்காசிக்கு புறப்பட்டது. பஸ்சை வீரவநல்லூரை சேர்ந்த கணேசன் (42) ஓட்டி வந்தார். மகிழ்வண்ணநாதபுரம் வேல்மயில் (49), நடத்துநராக இருந்தார்.  மாலை 5 மணியளவில் கடையம் அடுத்த முதலியார்பட்டிக்கு பஸ் வந்தபோது ரயில்வே கேட் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்காமல் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு நின்றிருந்த மக்கள் பஸ்சை மறித்துள்ளனர். இதனால் அவர்களுக்கும், டிரைவர் கணேசனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஊர் பெரியவர்கள் பஸ்சை சிறைபிடித்தனர்.

Advertising
Advertising

இதுகுறித்து புகார் கொடுப்பதற்காக டிரைவர் பஸ்சை கடையம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார். பஸ் நிலையம் வழியாக பஸ் சென்றும், பயணிகளை இறக்கி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுமார் 20 நிமிடம், காவல் நிலையத்தில் பஸ் நின்றுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சம்பவம் குறித்து முதலியார்பட்டி மக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் அடிக்கடி அரசு பஸ்கள் நிற்காமல் செல்கிறது. நேற்று அரசு பஸ்சை மறித்து கேட்டதற்கு டிரைவர் ஆபாசமாக திட்டினார். ஆனால் பின்னர் எங்கள் மீதே புகார் கொடுத்தது வேதனையாக உள்ளது, என்றனர்.

Related Stories: