திருமங்கலம் - செங்கோட்டை இடையிலான 4 வழிச்சாலை திட்டத்துக்கு மாற்றுவழித்தடம்

சிவகிரி, ஜூலை 12:  திருமங்கலம் - செங்கோட்டை இடையிலான 4 வழிச்சாலை திட்டத்தை மாற்று வழித்தடத்தில் செயல்படுத்தக்கோரி மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் தனுஷ்குமார் எம்பி கோரிக்கை மனு அளித்தார்.

திருமங்கலம் முதல் செங்கோட்டை வரையிலான 147 கிமீ தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்க மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான  பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக ராஜபாளையம் சத்திரப்பட்டியில் இருந்து செங்கோட்டை வரையிலான 69 கிமீ தொலைவிற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த 69 கி.மீட்டருக்கு அரசு தேர்ந்தெடுத்துள்ள ராஜபாளையம் அருள்புத்தூர் முதல் இனாம் கோவில்பட்டி, விஸ்வநாதப்பேரி, சிவகிரி, உள்ளார், வாசுதேவநல்லூர், சுப்பிரமணியபுரம், சிந்தாமணி-புளியங்குடி, பாம்புக்கோவில் சந்தைவிலக்கு, சொக்கம்பட்டி, கடையநல்லூர், வடகரை, அச்சன்புதூர், பண்பொழி, செங்கோட்டை வரையிலான வழித்தடம் முப்போகம் விளையும் நன்செய் நிலங்களாகும். எனவே மாற்று வழித்தடத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தக்கோரி சிவகிரி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை தாலுகா பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
Advertising
Advertising

இதனிடையே 4 வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகளை தேர்தலின்போது சந்தித்த தனுஷ்குமார் எம்பி, விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 4 வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சக அலுவலகத்தில் அமைச்சர் நிதின் கட்கரியை தனுஷ்குமார் எம்பி சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: பாரத் மாலா திட்டத்தின்கீழ் என்ஹெச்-744 திருமங்கலம் - கொல்லம் வரை ராஜபாளையம் வழியாக 4 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்காக வளமான விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்ற பல விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படும். எனவே இத்திட்டத்தை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விளைநிலமில்லாத மாற்று வழித்தடத்தில் அமைக்க தேவையான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: