நிலத்தடி நீரை சட்ட விரோதமாக உறிஞ்சி விற்பவர்கள் மீது வழக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நங்கநல்லூர் மற்றும் பழவந்தாங்கல் பகுதிகளில் வணிக நோக்கில் நிலத்தடி நீர் உறிஞ்சுவதை  தடுக்க கோரி இளையராஜா என்பவரும், சென்னை கவுரிவாக்கத்தில் உள்ள  விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சுவதை தடுக்க கோரி நாகேஸ்வர ராவ் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, வணிக நோக்கத்துக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறா அல்லது சொந்த தேவைக்காக எடுக்கப்படுகிறதா என்பது குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் சந்திரகுமாரை ஆணையராக நியமித்து உத்தரவிட்டனர்.இந்த உத்தரவின்படி நேரில் ஆய்வு நடத்திய வழக்கறிஞர் ஆணையர், தினமும் 250 முதல் 300 லாரிகளில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதாகவும், தண்ணீரை எடுக்க விவசாயத்துக்காக வழங்கப்பட்ட இலவச மின்சாரம் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
Advertising
Advertising

மேலும் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்க பழவந்தாங்கல் காவல் ஆய்வாளர் நடராஜ் உடந்தையாக இருப்பதாகவும், ஆய்வு செய்ய சென்றபோது முன்கூட்டி அனுமதி பெறாமல் எப்படி ஆய்வு செய்ய வரலாம் என ஆய்வாளர் மிரட்டியதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து, சட்டவிரோதமாகவோ, வணிக பயன்பாட்டுக்காகவோ நிலத்தடி நீர் எடுக்கப்படவில்லை என அறிக்கை தாக்கல் செய்த ஆய்வாளருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்துச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டும், அதை அமல்படுத்தாதது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மோட்டார்கள் பறிமுதல் செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்கு காவல்துறை இணை ஆணையர் மகேஸ்வரி நேரில் ஆஜரானார்.  அவரிடம், வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கைக்கு முரணாக ஆய்வாளர் அறிக்கை அளித்துள்ளதையும், வழக்கறிஞர் ஆணையரை மிரட்டும் தொணியில் பேசியதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,  ஆய்வாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.  வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கை காவல் துறைக்கு வழங்கப்பட்டு, விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பழவந்தாங்கல் ஆய்வாளருக்கு எதிராக துறைரீதியான விசாரணை நடத்தி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும்  காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக சட்டவிரோதமாக நிலத்தடி நீர்  எடுக்கப்படுவதை எதிர்த்த வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவு மாநிலம் முழுவதற்கும் பொருந்தும் எனக் கூறிய நீதிபதிகள், நிலத்தடி நீர் சட்டவிரோதமாக எடுக்கப்படுவது குறித்து காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டனர்.

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவது தெரிகிறது என அறிக்கை தாக்கல் செய்த தாசில்தார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 378,379 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் எடுத்ததாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அதிகாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை அதிகாரி உள்பட மூவருக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: