அயப்பாக்கத்தில் வறண்டு கிடக்கும் ஏரியை தூர்வாராத அதிகாரிகள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆவடி: சென்னை அருகே அயப்பாக்கம் ஏரி சுமார் 350 ஏக்கர் பரப்பளவில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆரம்ப காலத்தில் இந்த ஏரி நீரை பயன்படுத்தி பல ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டது. நாளடைவில் நீர் வரத்து கால்வாய்கள் படிப்படியாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியதால், ஏரிக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக விவசாயமும் படிப்படியாக குறைந்தது. தற்போது விவசாயம் அறவே இல்லை. மேலும், கடந்த 3 ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் குறைந்து வறட்சி ஏற்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்தி சமூகவிரோதிகள் ஏரி நிலங்களை ஆக்கிரமித்து ஏழை, எளிய மக்களை ஏமாற்றி விற்பனை செய்தனர். தற்போது, ஏரியை சுற்றி பல இடங்களில் ஆக்கிரமிப்பு வீடுகள் அதிகரித்துள்ளன. மேலும், அம்பத்தூர், அயப்பாக்கம், ஆவடி, திருவேற்காடு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வீடுகளில் இருந்து அகற்றப்படும் கழிவுநீரை நள்ளிரவில்  லாரிகள் மூலம் ஏரியில் விடுகின்றனர்.

இதனால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு சுற்றுப் பகுதி மக்கள் தண்ணீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர்.  கடந்த பல ஆண்டுகளாக ஏரியை பொதுப்பணித்துறை நிர்வாகம் தூர்வாரி பராமரிக்காததால் மழை நீரை ஏரியில் முழுமையாக சேமிக்க முடியவில்லை. எனவே, ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது ஏரி வறண்டுள்ளதால், குடியிருப்புகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.  இந்த ஏரியை தூர்வாறினால் வரும் மழைக்காலத்தில் தண்ணீரை அதிகளவு சேமிக்க முடியும் எனவே,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அயப்பாக்கம் ஏரியை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலயுறுத்தி உள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஏரியை சுற்றி எல்லையை வரையறை செய்து கரைகளை பலப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் வருங்காலத்தில் ஏரி ஆக்கிரமிப்பை தடுக்கலாம். மேலும்,  பருத்திப்பட்டு ஏரியை போல், அயப்பாக்கம் ஏரியை ஒட்டி பூங்கா, நடைப்பயிற்சி செய்ய நடைப்பாதை அமைத்து, சுற்றுலா தலமாக்க வேண்டும். இதனால், பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மாறும். அரசுக்கும் வருவாய் கிடைக்கும், என்றனர்.

Related Stories: