உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி போட்டி

புதுச்சேரி, ஜூலை 12:   உலக மக்கள் தொகை தினத்தையொட்டி புதுச்சேரியில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி போட்டி நடந்தது.  பெருகி வரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்த வருடந்தோறும் உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நேற்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுவையில் சுகாதாரத்துறை சார்பில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளை ஒன்றிணைத்து விழிப்புணர்வு பேரணி போட்டி நேற்று நடந்தது. செஞ்சி சாலை பாரதிதாசன் திடலில் புறப்பட்ட பேரணி நேரு வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரை சாலையில் முடிவுற்றது. பேரணியில் 500க்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில் அவர்களில் பலர் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், குச்சிப்புடி, கதகளி, தப்பாட்டம், பரதம், கோலாட்டம், மேளதாளம் அடித்தும், மக்கள்தொகை பெருக்கத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், விழிப்புணர்வு ஓவியங்களை முகத்தில் பூசியும் பிரசாரம் மேற்கொண்டனர். தொடர்ந்து, பரிசளிப்பு விழா நடந்தது.

விழிப்புணர்வு பேரணி போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த கல்லூரிகளுக்கு கேடயம், சான்றிதழ்களை அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் வாசுதேவன் வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் டாக்டர் அல்லிராணி, டாக்டர் முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த 2011ம் ஆண்டு நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 121 கோடியை தாண்டியிருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை எண்ணிக்கை 18 கோடி அதிகரித்துள்ளது. மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவை, 2028ல் இந்தியா முந்த உள்ளது. ஆகையால் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், காப்பர் டி, கருத்தடை ஊசி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தற்காலிக முறையை பயன்படுத்தி, மக்கள் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கலாம். மேலும், ஒரு குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் இடையே குறைந்தது 2 வருட இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: