கழிவுநீரை பூங்காவுக்கு பயன்படுத்த திட்டம்

புதுச்சேரி, ஜூலை 12: புதுச்சேரி தாவரவியல் மற்றும் பாரதி பூங்காவுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பைப் லைன் மூலம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ரூ.1.50 கோடி செலவில் விரைவில் துவங்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.   புதுச்சேரியில் நகர சாலையோர திறந்த கால்வாயில் விடப்படும் கழிவுநீர் தேக்கமடைந்து, கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. இதன் காரணமாக டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். இந்த அவல நிலையை போக்கும் வகையில், 1980ம் ஆண்டு புதுச்சேரியில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அனைத்து பணிகளும் முடிந்து இணைப்பு கொடுக்கப்பட்டன. அதன் பிறகு, ஜவகர்லால் நேரு புனரமைப்பு திட்டத்தின் கீழ் முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, முத்திரையர்பாளையம், மூலகுளம், ரெட்டியார்பாளையம் ஆகியவை 7 மண்டங்களாக பிரிக்கப்பட்டு பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

 புதுச்சேரி நகர மக்களின் நன்மைக்காக 2007 ஏப்ரலில் திட்டமிடப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இன்னமும் நிறைவு பெறவில்லை. இத்திட்ட பணிகளுக்கான டெண்டர் முதல் கழிவுநீர் குழாய்கள் பதித்தல், அதன் தொடர்புடைய பகுதிகளின் கட்டுமானம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுமானம் ஆகியவற்றில் ஏற்பட்ட காலதாமத்தினால் திட்டம் நிறைவேறாமல் உள்ளது. இத்திட்டத்தின் ஒரு அங்கமாக திப்புராயபேட்டை, கருவடிக்குப்பம், கனகன் ஏரி ஆகிய பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 51 எம்எல்டி கழிவுநீரை சுத்திகரித்து தோட்டங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பாதாள சாக்கடை பணிகள் நிறைவடையாததால் இலக்கை எட்ட முடியவில்லை.

புதுவையில் உள்ள 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் தற்போது 16 எம்எல்டி கழிவுநீர் மட்டுமே சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை வாங்குவதற்கு ஆளில்லாததால், அப்படியே கடலில் கலக்கவிடப்படுகிறது. இருப்பினும், ஒருசில தொழிற்சாலைகள் மட்டும் 1000 லிட்டர் தண்ணீரை ரூ.13.99 என்ற விலையில் வாங்கி பயன்படுத்தி வருகின்றன.  தற்போது, புதுச்சேரியில் தேவைக்கு அதிகமான தண்ணீர் நிலத்தடியிலிருந்து உறிஞ்சப்படுகிறது. இதனால் புதுச்சேரி நீரில்லா நாளை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில் நிலத்தடி நீரை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  இதன் ஒரு பகுதியாக, திப்புராயப்பேட்டை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பைப் லைன் மூலம் தாவரவியல் மற்றும் பாரதி பூங்காவில் உள்ள தாவரங்களுக்கு பாய்ச்சுவதற்கான தண்ணீரை கொண்டுவர பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கான பணிகள் ரூ.1.50 கோடி செலவில் விரைவில் துவங்கவுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுப்பணித்துறையின் கீழ் இயங்கி வரும் 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் தினமும் 16 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த தண்ணீரை தொழிற்சாலைகள், பூங்காக்கள், கட்டிட வேலைகளுக்கு பயன்படுத்தினால், நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறையும். இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

 குறிப்பாக, பாரதி பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவில் உள்ள செடிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, திப்புராயப்பேட்டை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திருந்து பூங்காக்களுக்கு ரூ.1.50 கோடி செலவில் பைப் லைன் அமைக்கப்பட உள்ளது. தற்போது டெண்டர் விடும் பணியும் முடிந்ததால், விரைவில் திட்ட பணிகள் துவங்கும். இதன் தொடர்ச்சியாக, புதுவையில் நடைபெறும் கட்டிட தொழில்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வாங்கி பயன்படுத்த கட்டுமான நிறுவனங்களிடம் அறிவுறுத்த உள்ளோம். மேலும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் தொழிற்சாலைகள் நிலத்தடியிலிருந்து தண்ணீரை உறிஞ்சுவதை நிறுத்திவிட்டு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தொழிற்சாலைகள்  கட்டாயம் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்: கல்வித்துறை நடவடிக்கை புதுச்சேரி,  ஜூலை 12:    புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடையாள அட்டை அணிய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.   புதுச்சேரியில் கல்வித்துறையில்  பல்வேறு சீர்த்திருத்த  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளில்  அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்ந்தது.

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதுபோல்,  ஆசிரியர்களுக்கும் அடையாள அட்டை அணிந்து பணிக்குவர கல்வித்துறை  நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதுவை பிராந்தியத்தில் உள்ள அரசு  மேல்நிலைப்பள்ளிகளில் இந்த புதிய நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.  மற்ற பள்ளிகளிலும் படிப்படியாக அனைத்து ஆசிரியர்கள் அடையாள அட்டை அணிந்து பள்ளிக்கு வருமாறு  உத்தரவு வெளியாகி உள்ளது.

 மொத்தமுள்ள 44 பள்ளிகளில் பணியாற்றும்  ஆசிரியர்கள் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கவும், தகவல்களை  சரிபார்க்கவும் 12, 15 மற்றும் 16ம் தேதிகளில் கதிர்காமம், நோனாங்குப்பம்,  வில்லியனூரில் நடைபெறும் புகைப்பட முகாமில் பங்கேற்குமாறு அந்தந்த பள்ளி  தலைமைக்கு பள்ளிக்கல்வி மாநில திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின்  உத்தரவிட்டுள்ளார். இந்த பணி முழுமைபெற்ற ஒருவாரத்திற்கு பிறகு அனைத்து  பள்ளிகளிலும் ஆசிரியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயமாக்கப்பட்டு அதன்  மீதான உயர் அதிகாரிகளின் கண்காணிப்பும் நடைபெறும் என்று கல்வித்துறை  வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: