போலீஸ் ரோந்து சைக்கிள்கள் மக்கும் அவலம்

புதுச்சேரி, ஜூலை 12: பழைய காலத்தில் காவலர்கள் சைக்கிள்களில் ரோந்து செல்வதையும், சப்-இன்ஸ்பெக்டர்கள் புல்லட் வாகனத்தில் செல்வதையும் பார்த்திருப்போம். ஆனால் காலப்போக்கில் இது மாறியது. சாதாரண காவலர்கள் முதற்கொண்டு எஸ்ஐ, இன்ஸ்பெக்டர்கள் வரையிலும் மோட்டார்சைக்கிள்களில் தான் இப்போது ரோந்து சென்று வருகின்றனர்.  ஒவ்வொரு காவல்நிலையத்திலும் காவலர்கள், ஏட்டுகள், உதவி எஸ்ஐக்கள், எஸ்ஐக்கள், இன்ஸ்பெக்டர் என 40க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவர். இதில் பீட் எனப்படும் ரோந்து காவலர்கள் 3 ஷிப்ட்களில் பணியில் அமர்த்தப்படுவர். காலை காலை, மாலை, இரவு என 3 ஷிப்ட்களில் தலா 2 காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றங்களை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் ரோந்து காவலர்களின் பங்கு மிகவும் அவசியமானது. மோட்டார்சைக்கிள்களில் ரோந்து செல்வதில் சில நன்மைகள் இருந்தாலும், இதில் சில அசவுகரியங்களும் இருக்கின்றன. பைக்கில் செல்லும்போது போலீசார் வேகமாக கடந்து சென்று விடுகின்றனர். சைக்கிளில் மெதுவாக சத்தமின்றி ரோந்து செல்லும்போது நன்றாக கண்காணிக்க முடியும். தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே காவலர்கள் ரோந்து செல்ல சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

அதுபோல், புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கவர்னர் கிரண்பேடி உத்தரவின்பேரில் காவல்துறை சார்பில் அனைத்து காவல்நிலையங்களுக்கும் காவலர்கள் ரோந்து செல்ல சைக்கிள்கள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு காவல்நிலையத்துக்கும் 5க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் இதுபோல் வழங்கப்பட்டது. அதன்பிறகு, இந்த சைக்கிள்களில் காவலர்கள் ரோந்து சென்றனர். பெரியகடை காவல்நிலையத்துக்கு உட்பட்ட கடற்கரை சாலையில் காவலர்கள் இப்போது சைக்கிள்களில் ரோந்து சொல்கின்றனர். ஆனால், பல காவல்நிலையங்களில் இந்த சைக்கிள்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமலேயே மக்கி வீணாகிறது.  எல்லோரும் மோட்டார்சைக்கிளில் ரோந்து செல்வதையே விரும்புவதால் வாங்கிக்கொடுத்த சைக்கிள்கள் அனைத்து காவல் நிலையங்களில் சுவற்றின் ஓரம் சாய்த்து நிறுத்தப்பட்டுள்ளது. மழை, வெயிலில் ஒரே இடத்தில் நிற்பதால் மக்கி வீணாகி வருகிறது.   எனவே, சைக்கிள்களை காவலர்கள் ரோந்து செல்ல பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: