காலி குடங்களுடன் மக்கள் திடீர் மறியல்

கள்ளக்குறிச்சி, ஜூலை 12: கள்ளக்குறிச்சி அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் கிராம காலனி பகுதியில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு பின்னர் தெரு பைப்லைன் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு சமுதாய மக்களுக்கும் தனியாக 3 ேமல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்று சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காலனி பகுதி தண்ணீர் தொட்டியில் இருந்து அப்பகுதிக்கு தண்ணீர் வழங்க பைப்லைனை இணைத்துள்ளனர். இதனால் கடந்த 4 மாதங்களாக காலனி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அப்பகுதி மக்கள் தங்களுக்கென அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை தங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஊராட்சி செயலரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் இதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.

Advertising
Advertising

இந்நிலையில் நேற்று காலை தச்சூர் காலனி பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் தடையில்லாமல் குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காலி குடங்களுடன் சேலம்-சென்னை நான்கு வழிச்சாலையின் இருபுறமும் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் போலீசாரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். தண்ணீர் பிரச்னையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என தெரிவித்து மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்வோர், வெளியூர் செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக மீண்டும் போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகளிடம் இதுதொடர்பாக தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: