வளையப்பேட்டையில் குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடும் குடிநீர்

கும்பகோணம், ஜூலை 12: கும்பகோணத்தில் உள்ள 45 வார்டுகளில் 2 லட்சம் குடியிருப்புகளுக்கு குடிதாங்கி கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கொள்ளிடம் ஆற்றிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் அமைத்து வளையப்பேட்டையில் உள்ள ராட்ஷத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட்டு நகராட்சியில் உள்ள 11 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இந்நிலையில் குடிதாங்கியில் இருந்து வரும் வளையப்பேட்டைக்கு வரும் குழாய், வளையப்பேட்டை அக்ரஹாரம் சாலையில் உடைந்ததால் சாலையில் குடிநீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குடிநீர் சென்று வீணாகி வருகிறது. இதுபோன்ற நிலையால் கும்பகோணம் பகுதியில் உள்ள பல்வேறு வார்டுகளில் குடிநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே வளையப்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் உடைந்துள்ள குடிநீர் குழாயை விரைந்து சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தாராசுரம் செந்தில்குமார் கூறுகையில், குடிதாங்கியிலிருந்து கும்பகோணம் நகராட்சி பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வெளியேறி வருகிறது. நகராட்சிக்கு ஒதுக்குபுறமாக இருப்பதால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். மேலும் குடிநீர் குழாயை பூமிக்கடியில் ஆழமாக பதிக்காமல் மேலோட்டமாக பதித்ததால் இதுபோல் அடிக்கடி குழாய் உடைந்து குடிநீர் வீணாகி விடுகிறது.தற்போது அனுமதியின்றி ஆற்றில் இரவு நேரத்தில் கொள்ளையடித்த மணலை ஏற்றி கொண்டு அதிவேகமாக வாகனங்கள் செல்லும்போது சாலையோரத்தில் பதித்துள்ள குழாய்கள் உடைந்து விடுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வளையப்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் வெளியேறும் குடிநீர் குழாயை சீரமைத்து நகராட்சி மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: