பேரணாம்பட்டில் வாகன சோதனையில் காரில் தம்பதி எடுத்துச்சென்ற ₹1.67 லட்சம் பறிமுதல்

பேரணாம்பட்டு, ஜூலை 12: பேரணாம்பட்டில் வாகன சோதனையில் காரில் உரிய ஆவணங்களின்றி தம்பதி எடுத்துச்சென்ற ₹1.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மக்களவை தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள் கொடுப்பதை தடுக்கவும், பரிசு பொருட்கள் கடத்தி செல்வதை தடுக்கவும் ரோந்து மற்றும் வாகன தணிக்கையை தேர்தல் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி சோதனை சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் லோகப்பிரியன் தலைமையில் சிறப்பு எஸ்ஐ ஜெயக்குமார், காவலர் ரமாபாய் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ₹1 லட்சத்து 67 ஆயிரத்து 900ஐ உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து காரில் இருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த எழிலன், அவரது மனைவி அரசி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அரசி நாகையில் தனியார் பள்ளி நடத்தி வருகிறோம். அங்கு மாணவர்களிடம் வசூல் செய்த பள்ளி கட்டணத்தொகையை கர்நாடக மாநிலம் கேஜிஎப்பில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு எடுத்து செல்வதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொள்ளாத அதிகாரிகள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பேரணாம்பட்டு தாசில்தார் செண்பகவள்ளியிடம் ஒப்படைத்தனர். அவர், பணத்தை குடியாத்தம் கருவூலத்தில் ஒப்படைத்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: