கலெக்டர் அலுவலகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் மனுத்தாக்கல் திமுக வேட்பாளர் இன்று மனுத்தாக்கல்

வேலூர், ஜூலை 12: வேலூர் மக்களவை தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் முதல்நாளில் அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் மனுத்தாக்கல் செய்தார். திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். இதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வேலூர் மக்களவை தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. மனுத்தாக்கல் செய்ய வரும் 18ம் தேதி கடைசி நாளாகும். 19ம்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 22ம்தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.முதல் நாளான நேற்று அதிமுக கட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் மனுத்தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம், முன்னாள் அமைச்சர் விஜய், அதிமுக மாவட்ட பொருளாளர் மூர்த்தி, வேலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ சதீஷ்குமார், வேலூர் மத்திய மாவட்ட தமாகா தலைவர் பி.எஸ்.பழனி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertising
Advertising

வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர், ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு பிரதமரை தேர்வு செய்யும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. நடைபெற உள்ள தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் பாலாறு தடுப்பணை மற்றும் கோதாவரி இணைப்பு திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவோம். ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். 2 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டித்தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பல ஆயிரம் வீடுகள் வேலூர் மக்களவை தொகுதியில் கட்டித்தரப்படும்’ என்றார். தொடர்ந்து அமைச்சர் ேக.சி.வீரமணி கூறுகையில், ‘அமமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதை கடந்த தேர்தலில் மக்கள் அமமுகவுக்கு உணர்த்திவிட்டனர். இதனால், வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை’ என்றார்.முதல் நாளான நேற்று அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி லலிதா லட்சுமி மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 7 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

முன்னதாக, வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களுடன் 3 கார்கள் மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. மனுத்தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே அரசு ஊழியர்களும் அடையாள அட்டை காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வேட்பு மனுத்தாக்கலையொட்டி வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் உட்பட 3 டிஎஸ்பிகள் தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கலெக்டர் அலுவலகம் சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் டி.எம்.கதிர்ஆனந்த் இன்று மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாருக்கு கலெக்டர் டோஸ்

கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர்களுடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று புதிய நீதிக்கட்சி வேட்பாளருடன் 11 பேர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வந்தனர். இதை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்த கலெக்டர், டிஎஸ்பிக்கள் உட்பட போலீஸ் அதிகாரிகளை அழைத்து, கண்காணிப்பு பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி கடுமையாக எச்சரித்தார்.

Related Stories: