மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் மாடியில் செயல்படும் ஆதார் மையத்தால் மாற்றுத்திறனாளிகள் அவதி

உடுமலை, ஜூலை 11:மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் முதல் மாடியில் செயல்படும் ஆதார் மையத்தால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். உடுமலை அடுத்த மடத்துக்குளத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதல் மாடியில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிதாக ஆதார் அட்டை பெறுவதற்காகவும், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகவும் தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.  முதல் மாடியில் மையம் உள்ளதால், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கு லிப்ட் வசதி, சாய் தள வசதி மற்றும் ஊனமுற்றோர் பயன்படுத்தும் வண்டிகள் இல்லை. இதனால் படிக்கட்டுகளில் கஷ்டப்பட்டு ஏறிச்செல்கின்றனர்.

 இது குறித்து மாற்றுத்திறனாளிகள் சார்பில், மடத்துக்குளம் திமுக எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணனிடம் மனு அளிக்கப்பட்டது. இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில் சாய்தளம் இருக்க வேண்டும் என்பது விதியாகும். எனவே, இதற்கு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும், அல்லது முதல் மாடியில் இருக்கும் ஆதார் மையத்தை தரை தளத்துக்கு மாற்ற வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: