ஆத்தூரில் ₹4 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மின்மோட்டார் மாயம்

ஆத்தூர், ஜூலை 11: ஆத்தூர் நகராட்சி 23வது வார்டில், நாராயணசாமி தெருவில் கடந்த 2016ம் ஆண்டு வறட்சி நிவாரண நிதியின் திட்டத்தின் கீழ், புதியதாக ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. பின்னர் இந்த ஆழ்துளை கிணற்றில் ₹4 லட்சம் மதிப்பில் மின்மோட்டார் வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய பணிகள் முடிந்தது. ஆனால் அந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவேயில்லை. இந்நிலையில் அந்த ஆழ்துளை கிணறு முடப்பட்டு அதன் மேல் தற்போது  கற்கள் பதிக்கக்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மின் மோட்டார் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

இதுகுறித்து வார்டு முன்னாள் கவுன்சிலர் செண்பகம், நகராட்சி மண்டல இயக்குனர், ஆணையாளருக்கு புகார் மனுஅனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2016ம் ஆண்டு வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் நாராயணசாமி தெருவில் அமைக்கப்பட்ட போர்வெல் தற்போது சாலை அமைக்கப்பட்டபோது முற்றிலும் முடப்பட்டுவிட்டது. அதில் தண்ணீர் போதிய இருப்பு இருக்கும் நிலையில் பயன்படுத்தப்படாமலே முடப்பட்டுள்ளது. இதில் உள்ள மோட்டார், லைன்கள் மின்சார இணைப்பு உள்ளிட்டவைகளை கவனிபாரற்ற நிலையில் இருந்து வருகிறது. இதில் மின் மோட்டார் இருக்கிறதா என தெரியவில்லை. எனவே, வறட்சி நிலவும் நேரத்தில் மின் மோட்டார் மற்றும் இணைப்புகளை சரிசெய்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: