ஆத்தூர் பகுதியில் வறட்சியால் காய்ந்து கருகிய கருவேப்பிலை

ஆத்தூர், ஜூலை 11: ஆத்தூர் பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் கருவேப்பிலை கருகி வருகிறது. சொட்டு நீர்பாசனத்தில் பயிரிட்டும் விளைச்சல் இல்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர், தென்னங்குடிபாளையம், சக்திநகர், மண்குன்று வடக்கு காடு உள்ளிட்ட பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கருவேப்பில்லை பயிரிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் இல்லாததால் விவசாய கிணறுகள் வறண்டு உள்ளது. இதனால் இருக்கின்ற தண்ணீரை கொண்டு சொட்டு நீர் பாசன முறையில் கருவேப்பிலை பயிரிட்டனர். ஆனால், தற்போது சொட்டு நீர் பாசன முறையில் போதிய தண்ணீரில்லாததால் கருவேப்பிலை முற்றிலும் கருகி காணப்படுகிறது.

இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த சில ஆண்டமாக இப்பகுதியில் கரும்பு, மஞ்சள் என பயிரிட்டு வந்த நிலையில், தற்போது நிலவும் வறட்சியால் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. இதனால் சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ் கருவேப்பிலை பயிரிட்டோம். ஆனால் அதற்கு தேவையான தண்ணீர் இல்லாத நிலையினால், கருவேப்பிலையும் கருகி காய்ந்து வருகிறது. இதனால் செலவு செய்த பணம் கூட கிடைக்காமல் தவித்து வருகிறோம். எனவே அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories: