எப்படி விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்பது? மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி

மதுரை, ஜூலை 11: விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்பது எப்படி? என்பது குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு நுணுக்கங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் மதுரையில் நடந்தது. இம்முகாமில் உடல்கல்வித்துறை இயக்குனர் செல்வகுமார் வரவேற்றார். முதல்வர் பாண்டியராஜா தலைமை வகித்தார். சர்வதேச விளையாட்டு வீரரும் விளையாட்டு ஆணைய மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சியாளருமான ரஞ்சித்குமார் பேசியதாவது; எந்த ஒரு துறையானாலும் எளிதில் வெற்றி பெற முடியாது. அதுபோலத்தான் விளையாட்டுத்துறையிலும் கடின உழைப்பு தேவை. மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, சம பங்களிப்பை தர முன்வந்துள்ளது. விளையாட்டுத்துறையில் சாதாரண பிரிவினருக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது போல மாற்றுத்திறனாளிகளை பிரித்துப்பார்க்காமல் வழங்கப்படுகிறது. தினமும் பயிற்சி எடுத்தால் உலகஅளவில் சாதிக்க முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள், உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றார். பின்னர் அவர் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் உள்ள நுணுக்கங்கள், போட்டிக்கு எப்படி தயார் செய்வது, பங்கேற்பது உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சியும் விளக்கவும் அளித்தார். விளையாட்டுக்குழு உறுப்பினர் கற்பகம் நன்றி கூறினார்.

Related Stories: