கொல்லப்பட்டி சாலையில் எங்க பார்த்தாலும் ‘குண்டு, குழி’ வாகனஓட்டிகள் அவதி

குஜிலியம்பாறை, ஜூலை 11: குஜிலியம்பாறை தாலுகா, பாளையம் பேரூராட்சி 14வது வார்டில் உள்ளது ஆர்.கொல்லப்பட்டி. இங்கு 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குஜிலியம்பாறையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ள சாலையின் எதிரே இவ்வூருக்கு செல்லும் ஒரு கிமீ தூர சாலை பாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 1996ம் ஆண்டு போடப்பட்டது. அதன்பின் எந்த பராமரிப்பு பணியும் மேற்கொள்ளவில்லை. இதனால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இச்சாலையின் அரை கிலோ மீட்டர் தொலைவில் குறுக்கே வறட்டாறு ஓடை செல்கிறது. இதன்மேல் கடந்த 1980ம் ஆண்டு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் தரைப்பாலம் முழுவதும் மழைநீர் செல்வதால் இவ்வழித்தடத்தில் வாகனஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது.

Advertising
Advertising

சாலையை புதுப்பிக்கவும், புதிய பாலத்தை கட்டித்தரவும் கோரி இப்பகுதி மக்கள் பலஆண்டுகளாக பேரூராட்சியிடம் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தார்ச்சாலை போட்டனர். மீதமுள்ள சாலை பணியை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். இதுபற்றி பேரூராட்சியிடம் கேட்டால் தரைப்பாலத்தில் புதிய பாலம் கட்டும் பணியின் போது இவ்வழித்தடத்தின் புதிய சாலை அமைக்கப்படும் என கூறுகின்றனர், இதனால் காச்சக்காரன்பட்டி, ராமகிரி கிராமங்களுக்கு செல்லும் வாகனஓட்டிகள்  அவதியடைந்து வருகின்றனர். மேலும் பொம்மிநாயக்கன்பட்டியில் இருந்து ஆர்.கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்களும் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் இத்தடம் துண்டிக்கப்பட்டு விடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் 23 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ள இவ்வழித்தடத்தில் தார்ச்சாலை அமைக்கவும், வறட்டாறு ஓடை மேல் புதிய பாலம் கட்டவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: