2 பேர் கைது அய்யம்பாளையத்தில் சாலையை அகலப்படுத்தி விட்டு பாலத்தை அப்படியே விட்டுட்டாங்க

பட்டிவீரன்பட்டி, ஜூலை 11: அய்யம்பாளையத்தில் சாலையை அகலப்படுத்தி விட்டு பாலத்தை அகலப்படுத்தாமல் விட்டு விட்டதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆத்தூர் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கடந்தாண்டு பட்டிவீரன்பட்டி காந்திபுரத்திலிருந்து அய்யம்பாளையம் வழியாக தாண்டிக்குடி மலையடிவாரம் வரையுள்ள 12 கிமீ தூரமுள்ள சாலை புதுப்பிக்கப்பட்டது. இப்பணியின் போது பெரும்பாலான இடங்களில் உள்ள பாலத்தை அகலமாக கட்டாமல் சாலையை மட்டும் விரிவுபடுத்தி விட்டனர். நெல்லூர் பிரிவில் உள்ள ஒரு பாலம் மட்டுமே அகலப்படுத்தி புதிதாக கட்டப்பட்டது. இதனால் ரோட்டின் விளிம்பில் உள்ள பாலங்கள் கனரக வாகனங்கள் செல்லும் போது மோதி இடிந்து விழுந்து வருகிறது. மேலும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலங்களாக இருப்பதால் போதிய வலுவின்றி இடிந்து வருகின்றன.

Advertising
Advertising

அய்யம்பாளையத்தில் வேப்பமரம் பஸ்நிறுத்தத்தின் அருகே மெயின்ரோட்டில் மிகவும் பழமையான சிறிய பாலம் இருந்தது. இந்த பாலத்தை புதிதாக கட்டாமல் சாலையை மட்டும் அகலப்படுத்தி சென்று விட்டனர். சாலை அகலமான காரணத்தினால் போதிய பிடிப்பின்றி பாலம் மெல்ல, மெல்ல சரிந்து தற்போது இடிந்தே விழுந்து விட்டது. மேலும் இந்த ரோட்டில் செல்லும் கால்வாயில் பாலம் இடிந்து கிடப்பதால் கழிவுநீர் அடைத்து இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அய்யம்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தால் நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தை சரிசெய்தால்தான் தங்களால் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க முடியும் என்று கூறுகின்றனர். இதனால் மெயின்ரோட்டில் வசிக்கும் 15வது வார்டு மக்கள் கழிவுநீர் அடைப்பால் அவதியடைந்து வருகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் ஓரத்தில் ஒதுங்கினால் உடைந்த பாலத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அய்யம்பாளையம் மெயின்ரோட்டில் உள்ள சேதமடைந்த பாலத்தை புதிதாக அகலப்படுத்தி கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: