திருநாகேஸ்வரத்தில் உள்ள பழநி ஐம்பொன் சிலை வழிபாட்டிற்கு வருமா?

பழநி, ஜூலை 11: திருநாகேஸ்வரம் திருமேனி பாதுகாப்பு மையத்தில் இருக்கும் பழநி முருகனின் ஐம்பொன் சிலை மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உள்ள மூலவர் முருகன் சிலை போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இந்த சிலையின் முன்பு ஐம்பொன்னால் ஆன உற்சவர் சிலை ஒன்று உள்ளது. கடந்த 2004, ஜனவரி 25ம் தேதி அதிமுக ஆட்சியில் நள்ளிரவில் அல்லூர் சிவாச்சாரியாரால் 221 கிலோ எடையுள்ள புதிய ஐம்பொன் சிலை கருவறையில் நிறுவப்பட்டது. ஆனால் நிறுவிய சில நாட்களிலேயே கருத்து விட்டதுடன், சிலை உயரமாக இருந்ததால் மூலவரை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் புதிய சிலையை அகற்ற வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி போன்ற காரணங்களால் பயந்து போன அப்போதைய அதிமுக அரசு, 2004, ஜூன் 7ம் தேதி சிலையை அப்புறப்படுத்தியது. தற்போது இச்சிலை மலைக்கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

கடந்த 2018, ஜூலை மாதம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரால் இந்த சிலை கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது. தொடர்ந்து கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை மீண்டும் பழநி மலைக்கோயிலுக்கு கொண்டு வந்து வழிபாட்டிற்கு வைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘‘2004ம் ஆண்டு பழநி கோயில் கருவறையில் வைக்கப்பட்ட இந்த சிலை அபிஷேக மூர்த்தியாகவே பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவருக்கு செய்யப்பட்ட அனைத்து பூஜைகளும், ஜம்பொன் சிலைக்கும் செய்யப்பட்டது. கருவறையில் சுமார் 6 மாத காலம் வைத்து பூஜிக்கப்பட்ட இந்த சிலைக்கும், சக்தி இருக்கும். எனவே, திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மீண்டும் பழநி கோயிலுக்கு கொண்டு வர வேண்டும். தகுதியான ஸ்தபதிகள் முலம் பிரசன்னம் பார்க்கப்பட்டு, ஆகம விதிப்படி மலைக்கோயிலின் தகுந்த இடத்தில் வைக்கப்பட்டு, முறையான பூஜைகள் மேற்கொள்ள வேண்டும். அல்லது ஐம்பொன் சிலைக்கு உரிய சாந்தி பூஜைகள் செய்ய வேண்டும்’’ என்றனர்.

Related Stories: