சாலையில் வாகனங்களுக்கு தடை பழநி சப்கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பழநி, ஜூலை 11: பழநி போஸ்ட் ஆபீஸ் சாலையில் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சப்கலெக்டர் அலுவலகத்தை கடைக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழநி தலைமை தபால் நிலையத்தில் இருந்து ரயில்வே பீடர் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலையில் வங்கிகள், வணிக வளாகங்கள், பேக்கரிகள், உணவகங்கள் அதிகளவு உள்ளன. சில வங்கிகளின் கட்டிடங்களில் வாகனங்கள் நிறுத்த அடித்தளத்தில் நிறுத்துமிடங்கள் உள்ளன. ஆனால், வங்கிகள் வாகனங்களை நிறுத்த அனுமதிப்பதில்லை. இதனால் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையோரமாக வாகனங்களை நிறுத்தி வந்தனர். இதேபோல் மற்ற தேவைகளுக்காக வருபவர்களும் சாலையோரத்திலே வாகனங்களை நிறுத்தி வந்தனர். இதனால் இச்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனை குறைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி மரை இச்சாலையில் டூவீலர் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று போஸ்ட் ஆபீஸ் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. இச்சாலையில் உணவகங்கள், பேக்கரிகள், மரக்கடைகள், செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகக்கடைகள் போன்ற பல கடைகள் உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாவதா கூறி நேற்று 100க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் சப்கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். சப்.கலெக்டர் அருண்ராஜ், நகராட்சி ஆணையர் நாராயணன், டிஎஸ்பி விவேகானந்தன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: