திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பஸ்சை திருடிய பலே கில்லாடி கைது

திருச்சி, ஜூலை 11: திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பஸ்சை திருடிச்சென்றவரை போலீசார் கைது செய்து பஸ்சை மீட்டனர்.திருச்சி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ஆய்வு நடத்தி முறைகேடுகளில் ஈடுபடும் வாகனங்களை பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த ஆண்டு வரி கட்டாமல் இயக்கிய ஒரு ஆம்னி பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்தனர். இந்த பஸ்சை மர்ம நபர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இரவு கடத்தி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.9 லட்சம். இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கடந்த ஜனவரி 3ம் தேதி கோர்ட் போலீசில் புகார் செய்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆம்னி பஸ்சையும், அதை திருடிய நபர்களையும் தேடி வந்தனர். பஸ் திருடிய அன்று இரவு ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் நடந்த செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்த அதிகாரிகள், குற்றவாளி விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு விரைந்து சென்றனர்.

அங்கிருந்த தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சுயம்பு என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர் பஸ்சை திருடியதை ஒப்புக்கொண்டார். அதன் பேரில் சுயம்புவை கைது செய்து அவரிடம் இருந்த பஸ்சை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சுயம்புவை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். திருட்டு போன பஸ்சை கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்த போலீசாரை கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.

Related Stories: