நெல்லையப்பர் கோயிலில் நெல்லை கோவிந்தர் சிலையில் மூலிகை பூச்சு சிதிலம்

நெல்லை,ஜூலை11:  நெல்லையப்பர் கோயிலில் உள்ள நெல்லை கோவிந்தர் சிலையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் சுவாமியின் கை பெருவிரல் மூலிகை பூச்சு சிதிலமடைந்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் பழமையானது நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலாகும். இக்கோயில் 14 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படுகிறது. பல்வேறு சிறப்புகளை உடைய நெல்லையப்பர் கோயிலில் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேக திருப்பணியில் அம்மன் சன்னதியில் உள்ள பலி பிரகாரம் மற்றும் கருமாரி தெப்பம், வசந்த மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் திருப்பணி செய்யாமல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

சுவாமி சந்நிதி நுழைவாயிலில் உள்ள நவக்கிரக சிலை சேதமடைந்தது. தங்க கொடிமரத்தில் தங்கம் சுரண்டப்பட்டதாகவும், ஆகம விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் கும்பாபிஷேகம் நடத்தியதாகவும் பக்தர்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்துவந்தது. இதைதொடர்ந்து அம்மன் சன்னதியில் உள்ள தெட்சிணாமூரத்தி சன்னதியில் மர்ம நபர்கள் மஞ்சள் வர்ணம் பூசியதை கோயில் பணியாளர்கள் அழித்தனர். அம்மன் சன்னதி பகுதியில் அமைந்துள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் நள்ளிரவில் போலீசாருடன் மர்ம நபர் ஒருவர் தங்கியிருந்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இன்றுவரை விடை தெரியாமல் பக்தர்கள் புலம்பி வருகின்றனர்.  மூலஸ்தான சுவாமி நெல்லையப்பர் சன்னதிக்கு அருகே உள்ள நெல்லை கோவிந்தர் சிலை மூலிகையினாலானது. இதனால் சுவாமி நெல்லை கோவிந்தருக்கு அபிஷேகம் கிடையாது.

நெல்லையப்பர் கோயிலை போல் வேறு எங்கும் தரிசிக்க முடியாத வகையில் சுவாமி நெல்லையப்பர் சன்னதிக்கு அருகே சயன கோலத்தில் பள்ளிகொண்ட பெருமாளாக நெல்லை கோவிந்தர் சன்னதி உள்ளது. இந்த நெல்லை கோவிந்தர் மார்பில் சிவலிங்கம் தரித்த நிலையில் வலது கரத்தால் சிவனை காட்டியும், இடது கரத்தை உயர்த்தி ஆசி வழங்குவது போலவும் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

 தற்போது நெல்லையப்பர் கோயிலில் ஆனித்பெருந்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் காலை மற்றும் மாலையில் வந்து சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்மனை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில் நெல்லை கோவிந்தரின் இடது கையின் பெருவிரலில் மூலிகை பூச்சு சிதிலம் அடைந்து பெயர்ந்துள்ளது. இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தினமும் கோயிலில் பூஜை காரியங்களை செய்பவர்கள் இதனை கோயில் நிர்வாகத்திடம் தெரிவிக்காத நிலை தொடர்கிறா? இல்லை நிர்வாகத்திற்கு தெரிந்தும் கண்டும் காணாது போல் அறநிலையத்துறை உள்ளதா என பக்தர்கள் புலம்பி தவிக்கின்றனர்.

Related Stories: