வேலூரில் இருந்து ராணிப்பேட்டைக்கு வாக்கு எண்ணிக்கை மையம் மாற்றம் அரசியல் கட்சியினர் ஒப்புதலுடன் நடவடிக்கை

வேலூர், ஜூலை 11: வேலூர் பொறியியல் கல்லூரியில் இருந்த வாக்கு எண்ணிக்கை மையம் ராணிப்பேட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவை, மக்களவை தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கை மையங்களாக வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியும், ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியும் இருந்து வந்தது. அங்கு சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனியாக அறைகளில் வைக்கப்படும். பின்னர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.

இந்நிலையில், தற்போது வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் இருந்து ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் கலெக்டர் சண்முகசுந்தரம், எஸ்பி பிரவேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

வேலூர் மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவிபேட் ஆகியவற்றை தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வு விரைவில் தொடங்க உள்ளது. இதனால் அவர்களின் தேர்வு நடைமுறைகள் பாதிக்கும். மேலும் அவர்களின் வகுப்பறைகளை முழுவதுமாக எடுத்துக்கொள்வதால் குறைந்தபட்சம் ஒரு வாரம் விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதோடு மாணவ, மாணவிகளை உள்ளே அனுமதித்தால் பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை மையத்தை ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரக்கோணம் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அங்கு போதுமான இடவசதி, போக்குவரத்து வசதி உட்பட அனைத்து வசதிகளும் இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து கலெக்டரிடம் அறிக்கை அளித்துள்ளனர். இதுதொடர்பாக அரசியல் கட்சியினரின் கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் ராணிப்பேட்டையில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஒப்புதல் அளித்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு முறையாக அறிக்கை அளித்தும், அங்கிருந்து அனுமதி விரைவில் கிடைத்துவிடும். அதற்குள் அனைத்து ஏற்பாடுகளையும் இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: