இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நினைவு தினம் அனுசரிப்பு மலர் தூவி கலெக்டர், எஸ்பி மரியாதை

வேலூர், ஜூலை 11: இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நினைவு தினம் வேலூரில் நேற்று அனுசரிக்கப்பட்டது. கலெக்டர் சண்முகசுந்தரம், எஸ்பி பிரவேஷ்குமார் ஆகியோர் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். கி.பி.1806ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சிப்பாய் புரட்சி வெடித்தது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக முதன்முதலில் நடந்த இந்த புரட்சிதான் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டது. இதில் ஆங்கிலேயர்களை எதிர்த்த காரணத்தால், இந்திய சிப்பாய்கள் ஏராளமானோர் ஆங்கிலேய படையால் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக வேலூர் மக்கான் பகுதியில் சிப்பாய் புரட்சி நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜூலை 10ம் தேதி சிப்பாய் புரட்சி நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 213வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நினைவுத்தூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு காலை 8 மணியளவில் கலெக்டர் சண்முகசுந்தரம், எஸ்பி பிரவேஷ்குமார், டிஆர்ஓ பார்த்தீபன், டிஎஸ்பி பாலகிருஷ்ணன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் செந்தில்குமார், தாசில்தார் ரமேஷ், படைவீரர்கள் நல சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். மேலும் சுதந்திர போராட்ட தியாகிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் நினைவுத்தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: