ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் எடுத்து செல்ல சோதனை ஓட்டம் நடந்தது பைப்பில் நீர் கசிவால் சீரமைப்பு பணிகள் தீவிரம்

ஜோலார்பேட்டை, ஜூலை 11:  ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் முடிந்து நேற்று சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது பைப்பில் நீர் கசிவு ஏற்பட்டதால் அதனை சீரமைக்கும் பணிகள் நடந்தது. சென்னையில் நிலவி வரும் குடிநீர் பஞ்சத்தை போக்குவதற்காக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் எடுத்து செல்ல தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு ராட்சத பைப்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து, ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியில் இருந்து பார்சம்பேட்டை அருகே வரை 3.5 கிலோ மீட்டர் வரையிலான பகுதியில் ராட்சத பைப் லைன்கள் அமைக்கப்பட்டது. அங்கிருந்து ரயிலில் குடிநீர் ஏற்றுவதற்கான பணிகள் முடிந்தவுடன் ரயில்வே யார்டு வரை சோதனை ஓட்டம் நேற்று நடைபெறும் எனவும், விரைவில் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், குடிநீர் கொண்டு செல்வதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 50 வேகன்கள் கொண்ட ரயில் 5வது யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில், குடிநீர் நிரப்புவதற்காக ராட்சத குழாயில் இருந்து பைப் லைன் அமைக்கும் பணியும், 58 வால்வுகள் அமைத்து அதில் குடிநீர் ஏற்றுவதற்கான அனைத்து பணிகளும் நேற்று காலை முடிவடைந்தது. இதையடுத்து ேநற்று மதியம் 12 மணியளவில் மேட்டுசக்கரகுப்பத்தில் இருந்து சுண்ணாம்பு காளை என்ற பகுதி வரை முதல்கட்ட சோதனை ஓட்டம் நடந்தது. தொடர்ந்து அரை மணி நேரம் குடிநீர் திறக்கப்பட்ட நிலையில் மேட்டுச்சக்கரகுப்பம் ஆஞ்சநேயர் கோயில் அருகில் பைப் லைனில் இருந்து தண்ணீர் கசிந்தது தெரிய வந்தது. இதனால் தண்ணீர் பம்பிங் செய்வது நிறுத்தப்பட்டது. உடனடியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து ஜேசிபி மூலம் தண்ணீர் கசிந்த இடத்தை தோண்டி பைப் பழுதை சீரமைத்தனர்.

இந்த பணி முடிவடைந்தவுடன் 2ம் கட்டமாக பார்சம்பேட்டை ரயில்வே யார்டு வரை குடிநீர் திறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மதியம் நடந்த சோதனை ஓட்டத்தில் ஒரு இடத்தில் நீர்க்கசிவு கண்டறியப்பட்டு அங்கு பைப் லைன் சீரமைக்கப்பட்டு கான்கிரீட் போடப்பட்டுள்ளது. கான்கிரீட் காய்ந்ததும் 2வது கட்ட சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பிறகு ரயில்வே யார்டு வரை சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இதில் குறைகள் ஏதும் இல்லாவிட்டால், வரும் 12ம் தேதிக்கு பிறகு சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: