×

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்நிலைகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க மத்திய குழு பரிந்துரை வரலாறு காணாத வறட்சியால் அதிர்ச்சி

திருவண்ணாமலை, ஜூலை 11: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சியை நேரில் பார்வையிட்டு வரும் மத்திய குழுவினர், நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிக்காக கூடுதல் நிதிக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளது. இயற்கையின் சமநிலையற்ற தன்மையால், சமீப ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வருகிறது. தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் கடந்த சில ஆண்டுகளாக கைகொடுக்கவில்லை.  எனவே, தமிழகம் முழுவதும் மிகக் கடுமையான வறட்சி ஏற்பட்டிருக்கிறது. குடிநீருக்காக மக்கள் தவியாய் தவிக்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில், திருவண்ணாமலை முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் வறட்சியான மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள 255 மாவட்டங்கள் கண்டறிந்து, நீர்ப் பாதுகாப்பு மற்றும் நீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்த ‘ஜல் சக்தி அபியான்’ எனும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 1ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட மாவட்டங்களை நேரில் ஆய்வு செய்ய, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மத்திய அரசில் பணிபுரியும் கூடுதல் மற்றும் இணைச் செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தை பார்வையிடுவதற்கான ஆய்வுக்குழுவின் தலைவர் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளர் ரஜீப்குமார்சென் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் கடந்த 5ம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.அதன்படி, பாசன கிணறுகள், குடிநீர் திட்டங்கள், அணைகள், ஏரிகள், வறட்சியால் பாதிக்கப்பட்ட சாகுபடி பயிர்கள், பொய்த்துப் போன விவசாய சாகுபடி போன்றவற்றை நேரில் பார்வையிட்டுள்ளனர். இந்த ஆய்வுப் பயணம் நாளையுடன் முடிகிறது.

கடந்த ஒரு வாரமாக, திருவண்ணாமலை மாவட்டத்தின் மிக மோசமான வறட்சிைய நேரில் பார்வையிட்ட மத்திய குழுவினர் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். குடிநீருக்காக காலி குடங்களுடன் கிராமங்களில் மக்கள் தவிப்பதை நேரில் பார்வையிட்டதும், கால்நடைகள் தவிப்பதையும், கரும்பு பயிர் காய்ந்து கருகியிருப்பதும் மத்திய குழுவை வேதனையடையச் செய்திருப்பதாக குழுவில் பங்கேற்றுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக கூடுதல் நிதி ஒதுக்கவும், தனி கவனம் செலுத்தவும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க மத்திய குழுவினர் முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags :
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...