×

செய்யாறு அருகே பாராசூர் அரசு பள்ளியில் பாடம் நடத்தாத தமிழ் ஆசிரியை மாற்றக்கோரி மாணவர்கள் மறியல்

செய்யாறு, ஜூலை 11: செய்யாறு அருகே பாராசூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்தாத தமிழ் ஆசிரியரை மாற்றக்கோரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா பாராசூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக தமிழ் ஆசிரியராக ராதா பணியாற்றி வருகிறார். கடந்த சில வருடங்களாகவே ஆசிரியர் ராதா மாணவர்களுக்கு சரியாக புரியும் வகையில் பாடம் நடத்துவதில்லை என மாணவரின் பெற்றோர்களும் கல்வித்துறைக்கு பல முறை தெரிவித்தனர். மேலும் தமிழ் ஆசிரியர் ராதா சரியாக நடத்தாத நிலையில், தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் தமிழ் பாடம் நடத்தி வருகிறாராம்.

தற்போது இந்த கல்வியாண்டில் மீண்டும் தமிழ் ஆசிரியர் ராதாவிற்கு 10ம் வகுப்பு உட்பட சில வகுப்புகளுக்கு தமிழ் பாடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அவர் பள்ளி தொடங்கி 1 மாதம் ஆன நிலையில் ஒரு பாடம் கூட நடத்தவில்லையாம்.  இதனால் ஆத்திரமடைந்த 9, 10ம் வகுப்பு மாணவர்கள் நேற்று திடீரென பள்ளியை விட்டு வெளியேறி பள்ளி எதிரே பெரணமல்லூர் சாலையில் தமிழ் ஆசிரியை மாற்றக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட கல்வி அலுவலருக்கு உரிய தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர்.
அதன்பேரில் மாணவர்கள் மறியலை கைவிட்டு வகுப்பறைக்கு சென்றனர். இந்த மறியல் காரணமாக பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே