கலசபாக்கம் அருகே மிருகண்டா அணையில் மத்திய குழுவினர் ஆய்வு

கலசபாக்கம், ஜூலை 11: கலசபாக்கம் ஒன்றியம் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணையில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.நீர்நிலைகளை பாதுகாத்திடவும், எதிர்காலத்தில் மழைநீரை வீணாக்காமல் சேமித்து இயற்கை வளங்களை பாதுகாக்கவும் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலம் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, கலசபாக்கம் ஒன்றியம் சிறுவள்ளூர், தேவராயன்பாளையம், கடலாடி, கேட்டவரம்பாளையம், தேவராயன்பாளையம், மேல்சோழங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், தடுப்பணைகள், கால்நடைகளுக்கு கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள், மரக்கன்று உற்பத்தி, பழத்தோட்டம் உள்ளிட்ட பணிகளை மத்திய குழுவை சேர்ந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சக இயக்குநர் சுரபிராய், தொழில்நுட்ப வல்லுனர் சிம்பி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மேல்சோழங்குப்பம் கிராமத்தில் முழுமையாக வறண்டு காட்சி அளிக்கும் மிருகண்டா அணை மற்றும் அணையிலிருந்து ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களை ஆய்வு செய்தனர். அப்போது, செயற்பொறியாளர் ஜெகன்ஹாரா, பிடிஓ அன்பழகன் உடனிருந்தனர்.

Tags :
× RELATED தண்டராம்பட்டு அரசு பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை கலெக்டர் ஆய்வு