செங்கத்தில் டிரைவர் மீது தாக்குதல் எதிரொலி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆட்டோ சங்கத்தினர் ஸ்டிரைக் டிஎஸ்பி பேச்சுவார்த்தை தோல்வி

செங்கம், ஜூலை 11: செங்கத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியதாக கூறி, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆட்டோ சங்கத்தினர் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அவர்களுடன் டிஎஸ்பி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளி(40), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை செங்கம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுடன் இருந்தார். அப்போது, ஆட்டோவில் இருந்த பயணி ஒருவர் கீழே இறங்கி, அங்கிருந்த கடையில் மருந்து வாங்கச் சென்றார். அப்போது, அங்கு ரோந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, இங்கு ஏன் ஆட்டோ நிறுத்தினாய்? என முரளியிடம் கேட்டார். அதற்கு டிரைவர் முரளி பதிலளித்துக் கொண்டிருக்கும்போதே இன்ஸ்பெக்டர் ஜெயந்தி திடீரென அவரை தாக்கினாராம். இதில் அவருக்கு காதில் ரத்தம் வழிந்து அலறித் துடித்தார். உடனே அங்கிருந்தவர்கள் முரளியை மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் காவல் நிலையம் சென்று இன்ஸ்பெக்டர் ஜெயந்தியிடம் இதுகுறித்து கேட்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் அவர்களையும் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, செங்கம் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் நேற்று காலை முதல் ஆட்டோக்களை இயக்காமல் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த டிஎஸ்பி குத்தாலிங்கம், ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது அவர்கள், ஆட்டோ டிரைவர் முரளியை தாக்கிய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில் வேலை நிறுத்தத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர். இதனால் டிஎஸ்பியின் சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் ேவலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED தண்டராம்பட்டு அரசு பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை கலெக்டர் ஆய்வு