கொடைக்கானலில் திறக்காமலே உருக்குலைந்து வரும் உடற்பயிற்சி கூடம்

கொடைக்கானல், ஜூலை 10: கொடைக்கானலில் பல லட்சம் செலவில் கட்டி திறக்காமல் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் துருப்பிடித்தும், தூசிபடர்ந்தும் பாழாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நகராட்சி விளையாட்டு மைதானத்தில் பல ஆண்டுகளுக்கு முன் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ. பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்ட இந்த உடற்பயிற்சி கூடம் பணிகள் முழுமையாக நிறைவடைந்தும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் உடற்பயிற்சி உபகரணங்கள் அனைத்தும் துருப்பிடித்தும், புழுதிபடிந்தும் காணப்படுகிறது. தவிர பார்வையாளர்கள் அமரும் இடம் குப்பைகள் நிறைந்து சுகாதாரமற்றும், குடிகாரர்களின் கூடாரமாகவும் காட்சியளிக்கிறது. மேலும் இதனருகே உள்ள ஓய்வறை, கழிப்பறை புதர்மண்டி கடும் துர்நாற்றம் வீசுவதுடன் விஷஜந்துகளின் புகலிடமாகவும் காணப்படுகிறது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

Advertising
Advertising

இதுகுறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகையில், ‘பல லட்சம் செலவில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் தற்போது எதற்கு கட்டப்பட்டது என்ற நிலையில் உள்ளது. உடலை வலுவாக்கும் உபகரணங்கள் பராமரிப்பில்லாததால் துருப்பிடித்து வலுவிழந்து வருகின்றன. இங்குள்ள ஓய்வறை, கழிப்பறை புதர்மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் துரிதகதியில் நடவடிக்கை எடுத்து விளையாட்டு வீரர்களை ஊக்கமளிக்கும் வண்ணம் உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: