ஆம்பூரில் அதிக அளவு மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி பரிதாப பலி: கதறி அழுத பெற்றோர்

ஆம்பூர், ஜூலை 10: ஆம்பூரில் அதிக அளவு மாணவ, மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த பெற்றோர் கதறி அழுதனர். வேலூர் மாவட்டம், ஆம்பூர் மளிகைதோப்பை சேர்ந்தவர் முனிசாமி. இவர் லோடு ஏற்றும் தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி. இவர் ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மகள் திவ்ய தர்ஷிணி(7). ஆம்பூர் நாகநாதசுவாமி கோயில் அருகே உள்ள அரசு நிதியுதவி தொடக்க பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது ஆட்டோவில் திவ்ய தர்ஷிணி தனது தம்பி லோகேஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 15 பேருடன் பயணம் செய்தார். மோட்டுக்கொல்லையில் இருந்து பள்ளிக்கு வரும் வழியில் சாலையில் குடிநீர் குழாய் பதிக்க போடப்பட்ட பள்ளத்தில் இறங்கிய ஆட்டோ குலுங்கியதில் மாணவி திவ்ய தர்ஷிணி தவறி கீழே விழுந்தார். அப்போது அங்கு கிடந்த கற்கள் மீது தலை மோதியதில் மாணவி ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவி திவ்யதர்ஷிணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து, மருத்துவமனையில் மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாக்ஸ்:விதி மீறும் ஆட்டோக்களை கண்காணிக்க வேண்டும் ஆம்பூரில் உள்ள பல்வேறு அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால் தற்போது உள்ள ஆசிரியர் பணியிடங்களை தக்க வைக்க மாணவர்கள் நீண்ட தூர பயணத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். இதனால் அந்த நிதியுதவி பள்ளிகள் சார்பாக போதிய பாதுகாப்பு இன்றி மாணவர்களை ஆட்டோக்களில் அழைத்து செல்வதாக பலமுறை கல்வியாளர்கள் வட்டார கல்வி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மாணவி பலியான இச்சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், மாணவ, மாணவிகளை போக்குவரத்து விதிகளை மீறி ஆட்டோக்களில் அடைத்து செல்வதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்த மாணவியின் உறவினர்கள் வலியுறுத்தினர்.

Related Stories: