நீர் நிலைகளை தூர்வார அரசு ரூ.6 கோடி ஒதுக்கீடு

திருச்சி, ஜூன் 27: மண்ணச்சநல்லூர் தாலுகா ஓமாந்தூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் நேற்று நடந்தது.திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகித்து, 959 பயனாளிகளுக்கு ரூ.1.6 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் முன்னிலை வகி்த்தார். பின்னர் கலெக்டர் சிவராசு பேசியதாவது: அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் திட்டங்கள் முழுமையாக வெற்றி பெறும். திருச்சி மாவட்டத்தில் 867 ஏரி குளங்களில் வண்டல் மண், களிமண், சவுடுமண் போன்ற கனிமங்களை எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஏரிகளை தூர்வார ரூ.6 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவரை 50 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்னையை சமாளிக்க ஏரி குளங்களுக்கு வரும் வரத்து வாய்க்கால்களை பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்ய கூடாது. விவசாயிகள் அதிகளவில் பண்ணை குட்டைகள் அமைக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. ஆண் வாரிசு மற்றும் நிலம் வைத்திருப்பவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க இயலாது’ என்றார். கால்நடைத்துறை சார்பில் 87 பசுக்கள், 17 கன்றுகள், 76 வெள்ளாடுகள், 84 செம்மறி ஆடுகள், 115 கோழிகள், 7 செல்ல பிராணிகள் ஆகிய கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் செயற்கை முறையில் கருவூட்டல், தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. லால்குடி ஆர்டிஓ பாலாஜி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் பழனிதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: