விவசாயிகளிடம் கடன் வசூல் கெடுபிடியை கைவிட ேவண்டும்

வாழப்பாடி, ஜூன் 27:  பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகளிடம், கடன் வசூலுக்கான கெடுபிடியை கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்தார். வாழப்பாடியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேற்கு மண்டல பயிற்சி மாநாடு கூட்டம் 2வது நாளாக நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், மேட்டூர் அணையின் உபரி நீரை, கால்வாய் வெட்டி தேக்கி வைத்து, சேலம் மாவட்ட மக்கள் பயன்படுத்த நிதி ஒதுக்க வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளிடம், தனியார் அடியாட்களை வைத்து கெடுபிடியாக வசூல் செய்து வருகின்றனர். நிலத்தை ஏலம் விடுவது, ஜப்தி செய்வது என்ற நடவடிக்கையில் ஈடுபடுவதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு, கடன் வசூலுக்கான கெடுபிடியை கைவிட வேண்டும். தேர்தலுக்கு முன்பு விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை கொண்டு வரமாட்டோம் என்று கூறி விட்டு, தமிழக முதல்வர் தற்போது இரட்டை வேடம் போட்டு கொண்டிருக்கிறார். தென்மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை தடுத்து நிறுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை கண்டித்து, ஜூலை 9ம் தேதி தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் பிரமாண்டமான பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: