பெரியார் பல்கலைக்கழக பிஎச்.டி, எம்.பில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 6ம் தேதி பொது நுழைவுத்தேர்வு

ஓமலூர், ஜூன் 27:  பெரியார் பல்கலைக்கழக பிஎச்.டி, எம்.பில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 6ம் தேதி ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு நடக்கிறது.இது குறித்து பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழந்தைவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:சேலம் பெரியார் பல்கலைக்கழக பிஎச்.டி மற்றும் எம்பில் ஆராய்ச்சி பட்டங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, பொது நுழைவுத்தேர்வு வரும் ஜூலை 6ம் தேதி நடக்கிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் நடைபெறும் தேர்வுக்கான நுழைவு சீட்டுகளை, ஜூலை 3ம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டில் தேர்வு மையம், நேரம் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

பல்கலைக்கழக மான்யக்குழுவின் விதிப்படி, பெரியார் பல்கலைக்கழக பிஎச்.டி மற்றும் எம்பில் மாணவர் சேர்க்கை கடந்த 3ஆண்டுகளாக நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டின் ஜூலை பருவத்திற்கான பொது நுழைவுத்தேர்வுக்கு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை சரிபாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் நடைபெறும் பொது நுழைவுத் தேர்வுகள், சேலம் சோனா கலை அறிவியல் கல்லூரியிலும், நாமக்கல் மாவட்டத்தில் கேஎஸ்ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், தர்மபுரி மாவட்டத்தில் விஜய் வித்யாலயா கல்லூரியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் எம்ஜிஆர் கல்லூரியிலும், சேலம் பெரியார் பல்கலைக்கழக கணினி மையத்திலும் நடைபெற உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: