×

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் சேதமான விளையாட்டு உபகரணங்கள்

நாமக்கல், ஜூன் 27: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறுவர் பூங்காவை முறையாக பராமரிக்காததால், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஓய்வூதியர் குறைதீர் கூட்டம், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் மற்றும் அரசுத்துறைகளின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகிறது. நாள்தோறும் பல்வேறு கோரிக்கை மனுக்களுடன் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களும், குறைதீர் கூட்டத்தின் போது, சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 இடங்களில் சிறுவர் பூங்காக்கள், பசுமை வனம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்களில் புராதன சின்னங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபரகணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்கள், இந்த பூங்காக்களில் ஓய்வெடுத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால், இந்த பூங்காக்களில் உள்ள மரம், செடிகள் காய்ந்து போயுள்ளது. இருக்கைகள் உடைந்தும், புராதன சின்னங்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தும் உள்ளது.
ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதால், தடுப்புக்காக அமைக்கப்பட்ட மூங்கில் மரங்கள் உடைந்துள்ளது. முறையாக தண்ணீர் பாய்ச்சாததால், மரக்கன்றுகள் அனைத்தும் வளராமல் வீணாகி உள்ளது. மேலும், பொதுமக்கள் சிலர், பூங்காவை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பூங்காவை முறையாக பராமரித்து, மரக்கன்றுகளை தண்ணீர் விட்டு காப்பாற்ற வேண்டும். மேலும், குழந்தைகளின் நலன் கருதி, சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED மது விற்ற 8 பேர் கைது